Last Updated : 25 Oct, 2024 03:29 AM

 

Published : 25 Oct 2024 03:29 AM
Last Updated : 25 Oct 2024 03:29 AM

அனல் பறக்கும் சென்னபட்டணா இடைத்தேர்தல்: பாஜக முன்னாள் எம்எல்சி காங்கிரஸ் சார்பில் போட்டி

கர்நாடகாவில் சென்னபட்டணா இடைத்தேர்தலில் பாஜக முன்னாள் எம்எல்சி யோகேஷ்வரை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அவருக்கு போட்டியாக மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் பாஜக, மஜத கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால் சென்னபட்டணா இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னபட்டணா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சென்னபட்டணா தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணியில் மத்திய அமைச்சர் ஆகியுள்ள குமாரசாமி சென்னபட்டணா தொகுதியில் தனது மகன் நிகிலை களமிறக்க முடிவெடுத்தார். இதற்கு பாஜக எம்எல்சி சி.பி.யோகேஷ்வர் எதிர்ப்பு தெரிவித்தார். சென்னபட்டணா தொகுதியை மஜதவுக்கு ஒதுக்கினால் தான் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும அறிவித்தார். இதனை ஏற்காத பாஜக மேலிடம், அந்த தொகுதியை குமாரசாமி வசம் ஒப்படைத்த‌து. இதைத் தொடர்ந்து பாஜக, மஜத கூட்டணி வேட்பாளராக நிகில் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தானே அந்த தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதேபோல கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, யாரும் எதிர்பாராத நிலையில் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எம்எல்சி சி.பி.யோகேஷ்வரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது.

இதையடுத்து அவர், பாஜகவில் வகித்த எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து காங்கிரஸில் இணைந்தார். இதனால் சென்னபட்டணா இடைத்தேர்தல் களம் குமாரசாமிக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையேயான நேரடி மோதலாக மாறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x