Published : 25 Oct 2024 03:25 AM
Last Updated : 25 Oct 2024 03:25 AM
பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெரும்பாலான மிரட்டல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக அதிலும் குறிப்பாக எக்ஸ் வலைதளத்தின் வழியாக அதிகமான மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஏர் இந்தியா, விஸ்டாரா, இண்டிகோ நிறுவனங்களைச் சேர்ந்த தலா 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோன்று ஆகாஸா ஏர் நிறுவனம் தனது 14 விமானங்களுக்கு இதேபோன்ற மிரட்டலை எதிர்கொண்டது. நேற்று ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வீமான பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. ஒரே சமூக வலைதள கணக்கிலிருந்து இதுபோன்று தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்படும்பட்சத்தில் விமானத்தை திருப்பிவிடாமல் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைப்பதாக இருக்கும்.
இந்திய விமான நிறுவனங்கள் கடந்த 11 நாட்களில் மட்டும் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலை சந்தித்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் 160 மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விஸ்டாரா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ சோஷியல் மீடியா மூலமாக விஸ்டாராவின் சில விமானங்களுக்கு வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொண்டு அனைத்து வகையான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விஸ்டாரா நிறுவனத்தைப் பொருத்தவரை வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கே முன்னுரிமை" என்றார்.
புவனேஷ்வர் விமானநிலையத்துக்கு மிரட்டல்: புவனேஷ்வர் விமான நிலையத்துக்கு சமூக வலைதளம் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் பிரசன்னா மொஹந்தி கூறுகையில், “ எக்ஸ் வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆகாஸா ஏர் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். இதையடுத்து, நிலையான இயக்க விதிமுறை (எஸ்ஓபி) பின்பற்றப்பட்டு விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. இதில், மிரட்டல் புரளி என தெரியவந்ததையடுத்து விமானம் இலக்கு நோக்கி புறப்பட்டது. விமான நிலையத்துக்கு கூடுதல் பாாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக, விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கடந்த வாரம் பேசுகையில், “ விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கு எதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதுபோன்ற நபர்களுக்கு விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினார். இருப்பினும், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது விமான பயணிகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT