Published : 25 Oct 2024 03:19 AM
Last Updated : 25 Oct 2024 03:19 AM
ஆந்திரா, தெலங்கானா, பிஹார் ஆகிய 3 மாநிலங்களில் ரூ.6,798 கோடி மதிப்பிலான 2 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, பிஹாரில் சர்கத்தியா நர்கதியாகஞ்ச் - ரக்சால்- சீதாமர்ஹி - தர்பங்கா மற்றும் சீதாமர்ஹி - முசாபர்பூர் இடையே 256 கி.மீ. மற்றும் எர்ருபாளையம் - நம்பூரு இடையே அமராவதி வழியாக தெலங்கானாவையும் இணைக்கும் வகையில் 57 கி.மீ.க்கு புதிய பாதை அமைக்கப்பட உள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, மற்றும் பிஹாரில் உள்ள 8 மாவட்டங்களில் இந்தத் திட்டங்களால் ரயில்வே கட்டமைப்பு மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஆந்திர தலைநகர் அமராவதிக்கு 57 கி.மீ தூரம் வரை புதிய ரயில்வே பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டம் ரூ.2,245 கோடி செலவில் அமைக்கப்படும். ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை உட்பட நாட்டில் உள்ள முக்கிய தலைநகரங்களை அமராவதியுடன் இணைக்கும் விதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியின் மீது 3.2 கி.மீ தூரத்திற்கு ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இது ஆந்திராவில் உள்ள எர்ருபாளையம் - நம்பூரு இடையே அமையும். அமராவதி நினைவுத் தூண், உண்டவல்லி குகைகள், அமரேஸ்வர லிங்க சுவாமி திருக்கோயில், தியான புத்தர் திட்டம் போன்றவற்றை காண செல்வோருக்கு இப்பாதை எளிமையானது. மசூலிப்பட்டினம், கிருஷ்ணப்பட்டினம் மற்றும் காக்கிநாடா ஆகிய ஆந்திர துறைமுகங்களையும் இந்த ரயில்வே பாதை இணைக்கும்.
பீகாரில் ரூ.4,553 கோடி செலவில் நர்கதியாகஞ்ச்-ரக்சால்-சீதாமர்ஹி-தர்பங்கா மற்றும் சீதாமர்ஹி-முசாபர்பூர் இடையே இரட்டை வழித்தடம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தம் 256 கி.மீ தூரம் உள்ள இந்தத் திட்டத்தால், உத்தர பிரதேசம் மற்றும் வட பீகார் மாநில மக்கள் பயன் அடைவர்.
இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு நன்றி: மத்திய அமைச்சகம் ஆந்திராவின் தலைநகரான அமராவதியை பிற முக்கிய தலைநகர் ரயில்வே பாதையில் இணைக்கும் திட்டத்தை அறிவித்தற்கு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினம் ரயில்வே திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதையும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றவும் கோரிக்கை வைத்தார்.
தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ. 252 கோடி நிதி ஒதுக்கீடு: ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக ரூ. 252.42 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஸ்ரீகாகுளம் ரணஸ்தலம் பகுதியில் இருந்து 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT