Published : 25 Oct 2024 03:14 AM
Last Updated : 25 Oct 2024 03:14 AM
உத்தரபிரதேச இடைத்தேர்தலில் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதியே போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கிடைத்த 2 தொகுதிகளையும் மறுத்துவிட்டது. இதன் பின்னணி வெளியாகி உள்ளது.
சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் இண்டியா கூட்டணிக் கட்சிகளாக காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து உ.பி. சட்டப்பேரவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் 4 தொகுதிகளை கோரிய நிலையில் சமாஜ்வாதி 2 தொகுதிகளை கொடுத்தது. தற்போது சமாஜ்வாதியே அனைத்து 9 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் ஆதரவு அளித்து, விலகி நிற்கிறது.
இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘இந்த தேர்தலில் தொகுதிகளை விட அவற்றில் வெற்றி பெறுவது முக்கியம். இதற்கான உத்தியின்படி இண்டியா கூட்டணி 9 தொகுதிகளிலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. காங்கிரஸும், சமாஜ்வாதியும் இதன் வெற்றிக்காக தோளோடு தோள் நின்று பாடுபடும்" என்றார்.
உ.பி.யில் ஏழு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சமாஜ்வாதி, எஞ்சியிருந்த காஜியாபாத், கேர் ஆகிய 2 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியது. இவற்றில் காங்கிரஸ் வெல்வது மிகவும் கடினம் என்ற நிலை இருந்தது. இதனால் அகிலேஷுடன் ராகுல் தொலைபேசியில் பேசியதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக வெளியான தகவலின்படி, மகாராஷ்டிரா தேர்தலில் சமாஜ்வாதி போட்டியிடாமல் காங்கிரஸுக்கு முழு ஆதரவளிக்க உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஹரியானா பேரவை தேர்தலில் யாதவ் சமூகத்தினரின் வாக்குகள் பெறுவதற்கு காங்கிரஸ் முயலவில்லை. அங்கு சமாஜ்வாதிக்கு ஒரு தொகுதியாவது ஒதுக்கியிருந்தால் அகிலேஷும் இண்டியா கூட்டணிக்கு பிரச்சாரம் செய்திருப்பார் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் விலகியதற்காக அகிலேஷ் மகராஷ்டிராவில் இண்டியா கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.
சமாஜ்வாதிக்கு அனைத்து தொகுதிகளையும் ராகுல் விட்டுக்கொடுத்ததன் பின்னணியில் எதிர்கால அரசியலும் உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் காங்கிரஸ் பலம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT