Published : 25 Oct 2024 02:20 AM
Last Updated : 25 Oct 2024 02:20 AM
புரி: ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் டானா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து கிழக்கு வடகிழக்கே 50 கி.மீ தொலைவிலும், தாமராவில் இருந்து 40 கி.மீ தென்கிழக்கே மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில் இருந்து 160 கி.மீ தென்மேற்கிலும் நிலைகொண்டிருந்தது. இந்த சூழலில் நள்ளிரவில் கரையைக் கடக்க தொடங்கிய இந்த புயல், இன்று (அக். 25) அதிகாலை வரை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் நகர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒடிசா) அருகே செல்வதால் அப்பகுதிகளில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில், குறிப்பாக கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், பத்ரக் மற்றும் பாலசோர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதி கனமழை எச்சரிக்கை: பாரதீப் பகுதி, கேந்திரபாரா மாவட்டத்தின் ராஜ்நகர், பாலசூர், புரி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுக்கு பல மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக, ஒடிசா கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் கரையை கடக்கும்போது பத்ரக், பாலசூர், ஜஜ்பூர், கட்டாக், குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபடா மற்றும் புரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரை கடந்தபின் மேற்கு மற்றும் தென் பகுதி நோக்கி திரும்பும் வாய்ப்புள்ளதால் தெற்கு ஒடிசா பகுதியில் சனிக்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் பேர் வெளியேற்றம்: ஒடிசா முதல்வர் மோகன் சரண் கூறுகையில், “டானா புயல் காரணமாக ஒடிசாவின் 3 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. 14 மாவட்டங்களில் இருந்து 10 லட்சம் பேரை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டானா புயலை எதிர்கொள் ஒடிசா அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் பாதிப்பை சமாளிக்க மாநில அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார்.இதனிடையே, ஒடிசாவின் புரியில் உள்ள 12-ம் நூற்றாண்டு ஜெகன்நாதர் கோயிலை டானா புயல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்கு வங்கத்திலும் உஷார் நிலை: மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் வாழும் 3.5 லட்சம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில் மீட்புப் படையினர்: பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘டானா புயல் ஏற்படுத்தக் கூடிய கடுமையான தாக்கத்தை சமாளிக்க, இந்திய கடற்படை மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. கிழக்கு கடற்படை தலைமையகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள கடற்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விரிவான பேரிடர் மீட்பு செயல்முறையை வகுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT