Published : 24 Oct 2024 05:49 PM
Last Updated : 24 Oct 2024 05:49 PM

கடிகார சின்னத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால்... - அஜித் பவார் அணிக்கு உச்ச நீதிமன்றம் வைத்த ‘செக்’

கோப்புப்படம்

புதுடெல்லி: எதிர்வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி கடிகார சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மறுப்பு போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது. மேலும், தங்களின் வழிகாட்டுதல்களை என்சிபி (அஜித் பவார்) மீறாது என்று நவம்பர் 4-ம் தேதிக்குள் புதிய உறுதிமொழியை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், ‘தேர்தல் முடியும் வரை, எங்களின் உத்தரவுகளை நீங்கள் (அஜித் பவார் அணி) மீற மாட்டீர்கள் என்று புதிய உறுதிமொழி பத்திரத்தை நம்பர் 4-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யவேண்டும். உங்களுக்கு நீங்களே சிக்கலை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். எங்களின் உத்தரவுகளை நீங்கள் மீறுவதைக் நாங்கள் கண்டறிந்தால், நாங்கள் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, தேர்தலில் கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவார் அணி பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சரத் பவார் அணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது சரத் பவார் தலைமையிலான அணியின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் அஜித் பவார் அணி மறுப்பு வெளியிடுவதில்லை. வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே சரத் பவாருடன் இணைந்து போக எதிர் அணி விரும்புகிறது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், "அவர்கள், சரத் பவார் அணியைச் சேர்ந்தவர்கள் இல்லை. நீங்கள் முழுக்க முழுக்க அஜித் பவார் அணியைச் சேர்ந்தவர்கள் என்று போஸ்டர்களில் மறுப்பு செய்தி வெளியிட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் மிகவும் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பக்கத்தில் அப்படி எந்த ஒரு மறுப்பும் வெளியிடவில்லை. நோக்கம் இங்கே தெளிவாக தெரிகிறது. எங்களின் முதுகில் ஏறிக்கொள்வதன் மூலமாக அஜித் பவாரே அவர்களின் தந்தை போன்றவர் என்பதை ஏற்றுக்கொள்கின்றன.

மக்களவைச் செயலகத்திலேயும் கூட என்சிபி-யின் இரண்டு அணிகள் தொடர்பாக சிறு குழுப்பம் உள்ளது. அவர்கள் (அஜித் பவார் அணி) கொடுத்த வாக்குறுதி மீறப்படுகிறது. எங்கள் இருவருக்கும் கடிகாரச் சின்னம் தர வேண்டாம். அவர்களுக்கு வேறு ஏதாவது சின்னம் கொடுங்கள். வழக்கு விசாரணையில் இருக்கும்போது, சின்னத்தின் பலனை யாரும் பெற வேண்டாம்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, அஜித் பவார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங், தங்கள் தரப்பு நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளுக்கு இணைங்குவதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், "அவர்கள் (சரத் பவார் அணி) போலியான ஆவணங்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் மீண்டும் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்கின்றார்கள். களத்தில் பயன்படுத்தப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளையும் நான் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு பிரிவுகளாக பிளவு பட்ட நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய தேர்தல் ஆணையம் கடிகார சின்னத்தை அஜித் பவார் அணிக்கு ஒதுக்கியது. கடந்த ஆண்டு அஜித் பவார், சரத் பவாருக்கு எதிராக கலகம் செய்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் மகாயுதி கூட்டணியில் இணைந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, சரத் பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் பவார் என்று பெயர் வழங்கியதுடன் தேர்தலில் எக்காளம் ஊதும் மனிதனின் உருவத்தை சின்னமாக வழங்கியது. என்றாலும், அரசியல் ஆதாயத்துக்காக சரத் பவாரின் பெயர் புகைப்படத்தை அஜித் பவார் அணி பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x