Published : 30 Jun 2018 09:26 PM
Last Updated : 30 Jun 2018 09:26 PM

வீட்டுக்கே சென்று மற்ற கட்சியினரை பாஜகவில் சேருங்கள்: எடியூரப்பா அதிரடி பேச்சு

மற்ற கட்சியினரின் வீட்டிற்கே சென்று அவர்களை பாஜவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார். இதன் மூலம் விரைவில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பெங்களூருவில் நேற்று எடியூரப்பா தலைமையில் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் மத்திய அமைச்சர்கள் அனந்த குமார், சதானந்த கவுடா, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, அசோக், ஷோபா கரந்தலாஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ்- மஜத இடையேயான மோதல், குமாரசாமி - சித்தராமையா இடையேயான பனிப் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுப்பது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது உள்ளிட்டவையும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த சிலர் பாஜக அணியில் சேர விரும்புகின்றனர். எம்எல்ஏக்கள் மட்டுமின்றி மற்ற கட்சி நிர்வாகிகளும் பாஜகவில் சேர தயாராக உள்ளனர். அவர்கள் வருவதற்கு நாம் உதவ வேண்டும். மற்ற கட்சியினரின் வீட்டுக்கே நாம் சென்று அவர்களுடன் பேச வேண்டும். பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கர்நாடகாவில் விரைவில் பாஜக ஆட்சி அமையும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x