Last Updated : 24 Oct, 2024 05:02 AM

 

Published : 24 Oct 2024 05:02 AM
Last Updated : 24 Oct 2024 05:02 AM

உயிர் சக்தி வேளாண்மை மூலம் மண்ணின் ஆரோக்கியம், விளைச்சலை மேம்படுத்தலாம்: வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் கருத்து

பெங்களூரு: உயிர் சக்தி வேளாண்மை முறையின் மூலம் மண்ணின் ஆரோக்கியம், பயிர் விளைச்சலின் அளவை மேம்படுத்த முடியும் என பெங்களூருவில் நடந்த‌ மாநாட்டில் வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய‌ மாநாடு பெங்களூருவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் (Biodyanamic association of India) தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், கன்னட எழுத்தாளர் சித்தராமையா, உயிர் சக்தி வேளாண் நிபுணர்கள் முனைவர் சுல்தான் இஸ்மாயில், மகேஷ் மெல்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய உயிர் சக்தி வேளாண் மாநாட்டின் 2-வது நாளான நேற்று நிபுணர்கள் சுல்தான் இஸ்மாயில், ஜஸ்பால் சிங் உள்ளிட்டோர் உரையாற்றினர்.இந்த மாநாட்டின் 2-ம் நாளான நேற்று இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்ட‌மைப்பின் தலைவர் கே.சந்திரசேகரன் பேசுகையில், உயிர் சக்தி வேளாண்மையின் தோற்றம், எதிர்கொள்ளும் சவால்கள், பருவ நிலை மாற்றங்கள், எதிர்காலத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்தல் உள்ளிட்டவற்றை விளக்கினார். மேலும் இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் 25-வது ஆண்டு விழா, உலகளாவிய உயிர் வேளாண் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தொடர்பாகவும் விவரித்தார்.

இயற்கை வேளாண் நிபுணர்கள் ஜஸ்பால் சிங் ‘காலநிலை மாற் றத்தை சமநிலைப்படுத்துவது' தொடர்பாகவும், பேராசிரியர் மஞ்சுளா ‘மாற்று விவசாய முறைகளின் பங்களிப்புகள்' குறித்தும் உரையாற்றினர். உயிர் சக்தி வேளாண் நிபுணர் சுல்தான் இஸ்மாயில் ‘‘மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உயிர் சக்தி வேளாண் முறை'' குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், ‘‘உயிர் சக்தி வேளாண் முறை ரசாயனங்களை முழுமையாக தவிர்த்த, இயற்கை விவசாயத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். இதனால் மாசடைந்துள்ள மண்ணின் ஆரோக்கியம் திரும்பவும் மீட்டெடுக்கப்படுகிறது. மண்ணின் ஆரோக்கியம் மேம்படுவதால், பயிர் விளைச்சலும் மேம்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், சுற்றுச்சூழலும் மேம்படுகிறது'' என தெரிவித்தார்.

முனைவர் முருகேசன், ‘உயிர் சக்தி வேளாண்மை முறையிலும் நீர் மேலாண்மை' என்ற தலைப்பிலும், முனைவர் மகேஷ் மெல்வின், ‘விதை உற்பத்தியில் உள்ள சவால்களை நிவர்த்தி செய்யும் முறை' குறித்தும் பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x