Published : 24 Oct 2024 04:54 AM
Last Updated : 24 Oct 2024 04:54 AM
ருத்ராபூர்: உத்தர பிரதேச மாநிலம் ஜாபர்பூர் கிராமத்தில் கடந்த 12-ம் தேதி இரு கோஷ்டிகளுக்கு இடையில் மோதல் ஏற்படுத்தப்பட்டது. அப்போது இருதரப்பும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பொதுமக்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்த ஜஸ்வீர் சிங், தினேஷ்பூரை சேர்ந்த மன்மோகன் சிங், உ.பி. மாநில ராம்பூரை சேர்ந்த சாஹப் சிங் ஆகிய 3 பேர் தலைமறைவாயினர்.
இந்நிலையில் மேற்கூறிய 3 முக்கிய குற்றவாளிகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 அன்பளிப்பு வழங்கப்படும் என்று போலீஸார் நேற்று அறிவித்தனர். இதுகுறித்து உத்தராகண்ட் மாநில உதம் சிங் நாகர் மாவட்ட போலீஸ் எஸ்எஸ்பி மணிகண்ட மிஸ்ரா நேற்று கூறியதாவது: வழக்கமாக குற்றவாளிகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு கணிசமான தொகை அன்பளிப்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்படும். ஆனால், பொதுமக்கள் மத்தியிலும் சட்டத்தின் கீழும் இது போன்ற குற்றவாளிகளின் மதிப்பை பகிரங்கப்படுத்தும் நோக்கில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தலைமறைவான 3 முக்கிய குற்றவாளிகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெறும் ரூ.5 மட்டும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்த நினைக்கும் குற்றவாளிகளின் உண்மையான மதிப்பு, மரியாதை இந்த சமுதாயத்தில் இவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தவே இவ்வளவு குறைந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் பற்றி தகவல் அளித்தால் குறைந்தபட்ச தொகையை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தினேஷ்பூரில் கடை வைத்திருக்கும் முகேஷ் சர்மா என்பவர் கூறும்போது, ‘‘போலீஸாரின் இந்த நடவடிக்கை குற்றவாளிகளுக்கு கடுமையான தகவலை கொண்டு சேர்க்கும். இதுபோன்ற குற்றவாளிகள் அச்சுறுத்தலாக இருக்க போவதில்லை என்பதை வெளிப்படுத்தும். இதுபோன்ற குற்றவாளிகளைப் பற்றி பயப்பட தேவையில்லை என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT