Published : 23 Oct 2024 08:21 PM
Last Updated : 23 Oct 2024 08:21 PM

“இந்தியா ஆதரிப்பது அமைதிப் பேச்சு... போர் அல்ல!” - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி.

ரஷ்யா: “இந்தியா ஆதரிப்பது அமைதிப் பேச்சுவார்த்தையையே தவிர, போரை அல்ல” என்று ரஷ்யாவில் 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பிரதமர் மோடி பேசினார்.

கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி பிரிக் (BRIC) அமைப்பு தொடங்கப்பட்டது. முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருந்தன. ஓராண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இணைந்தது. இதன் பிறகு இந்த அமைப்பு பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கப்பட்டது. கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்தன. இந்தச் சூழலில் பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று கசான் நகருக்கு சென்றார். புதன்கிழமை நடந்த 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பிரதமர் மோடி பேசியது:

“இன்றைய கூட்டத்தை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் குடும்பம் என்ற முறையில் நாம் இன்று முதன்முறையாக சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரிக்ஸ் குடும்பத்தில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். பிரிக்ஸ் அமைப்புக்கு கடந்த ஓராண்டு காலமாக வெற்றிகரமாக தலைமை வகித்ததற்காக அதிபர் புதினுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போர்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் போன்ற பல்வேறு முக்கிய சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ள நேரத்தில், இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. வடக்கு - தெற்கு பிரிவினை, கிழக்கு - மேற்கு பிரிவினையைப் பற்றி உலகம் பேசுகிறது. பணவீக்கத்தைத் தடுத்தல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு போன்றவை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்களாகும். தொழில்நுட்பத்தின் இந்த சகாப்தத்தில், சைபர் டீப்ஃபேக், தவறான தகவல் பரவுதல் போன்ற புதிய சவால்கள் உருவாகியுள்ளன.

இத்தகைய நேரத்தில், பிரிக்ஸ் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. பன்முகத்தன்மை கொண்ட மற்றும் உள்ளடக்கிய மேடையாக, பிரிக்ஸ் அனைத்து துறைகளிலும் நேர்மறையான பங்கை ஆற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில், நமது அணுகுமுறை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு பிளவுபடுத்தும் அமைப்பு அல்ல. மனித குலத்தின் நலனுக்காக செயல்படும் அமைப்பு என்ற செய்தியை நாம் உலகிற்கு அளிக்க வேண்டும்.

நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் ஆதரிக்கிறோம், போரை அல்ல. கோவிட் போன்ற ஒரு சவாலை நாம் ஒன்றிணைந்து சமாளிக்க முடிந்ததைப் போலவே, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, வலுவான, வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளை நிச்சயமாக உருவாக்க முடியும். பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்துப் போராட, நமக்கு அனைவரின் ஒருமித்த மற்றும் உறுதியான ஆதரவு தேவை. இந்த முக்கியமான விஷயத்தில் இரட்டை வேடம் போட இடமில்லை. நமது நாடுகளில் இளைஞர்கள் தீவிரமயப்படுவதைத் தடுக்க நாம் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஐநா-வில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்த விரிவான செயல்திட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல், இணையதள பாதுகாப்பு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான உலகளாவிய விதிமுறைகளை வகுக்க நாம் பணியாற்ற வேண்டும். பிரிக்ஸ் அமைப்பில் புதிய நாடுகளை நட்பு நாடுகளாக வரவேற்க இந்தியா தயாராக உள்ளது. இது தொடர்பாக அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். மேலும் பிரிக்ஸ் நிறுவன உறுப்பினர்களின் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும். ஜோகனெஸ்பர்க் உச்சிமாநாட்டின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டும் கொள்கைகள், தரநிலைகள், அளவுகோல்கள், நடைமுறைகள் ஆகியவை அனைத்து உறுப்பு நாடுகளாலும் பங்குதாரர் நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டும்.

பிரிக்ஸ் மாநாட்டில் சொந்தக் கருத்தை உலகிற்கு வழங்குவதன் மூலம், நாம் ஒன்றுபட்ட முறையில் உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்களுக்காக குரல் எழுப்ப வேண்டும். ஐநா பாதுகாப்புக் கவுன்சில், பன்னாட்டு வளர்ச்சி வங்கிகள், உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பிரிக்ஸ் அமைப்பில் நமது முயற்சிகளை நாம் முன்னெடுத்துச் செல்லும் போது, இந்த அமைப்பு உலகளாவிய நடைமுறைகளை மாற்ற முயற்சிக்கும் ஒரு அமைப்பு என்ற தோற்றம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

உலகின் தென்பகுதி நாடுகளின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் மனதில் கொள்ள வேண்டும். தென்பகுதி நாடுகளின் குரல்களை ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியா தலைமை வகித்தபோது உலக அரங்கில் ஒலிக்க வைத்தது. இந்த முயற்சிகள் பிரிக்ஸ் அமைப்பிலும் வலுப்பெற்று வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைக்கப்பட்டன. இந்த ஆண்டும், உலகளாவிய தென் பகுதி நாடுகள் பலவற்றுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. பல்வேறு கண்ணோட்டங்கள், சித்தாந்தங்கள் ஆகிவற்றின் சங்கமத்தால் உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் குழுவானது, உலகிற்கு உத்வேகம் அளிப்பதாகவும், நேர்மறையான ஒத்துழைப்பை வளர்ப்பதாகவும் உள்ளது.

நமது பன்முகத்தன்மை, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முன்னோக்கிச் செல்லும் நமது பாரம்பரியம் ஆகியவை நமது ஒத்துழைப்புக்கு அடிப்படையாகும். நமது இந்தத் தரமும், பிரிக்ஸ் நாடுகளின் உணர்வும் மற்ற நாடுகளையும் இந்த அமைப்பிற்கு ஈர்த்து வருகிறது. வரவிருக்கும் காலங்களில், இந்த தனித்துவமான தளத்தை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான முன்மாதிரியாக மாற்றுவோம் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில், பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர் என்ற முறையில், இந்தியா எப்போதும் தனது பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x