Published : 23 Oct 2024 06:29 PM
Last Updated : 23 Oct 2024 06:29 PM

‘டானா’ புயல் அப்டேட்: 150+ ரயில்கள் ரத்து; தயார் நிலையில் மீட்புப் படை!

புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு தினங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; தயார் நிலையில் மீட்புப் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (அக்.22) நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.23) காலை 5.30 மணி அளவில் புயலாக (டானா) வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் பாரதீப்புக்கு (ஒடிசா) தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்கம்) தெற்கு- தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாரவுக்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை 24-ம் தேதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக நாளை 24-ம் தேதி இரவு அல்லது நாளை மறுநாளான 25-ம் தேதி காலை கரையை கடக்கக் கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரயில்கள் ரத்தும், கனமழை எச்சரிக்கையும் : டானா புயல் காரணமாக நாளை (அக்.24) முதல் நாளை மறுதினம் (அக்.25) வரை 150-க்கும் மேற்பட்ட ரயில்களை தென் கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. டானா புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கனாஸ், பஸ்சிம், புர்பா மெதினிபூர், ஜார்கிரம், கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒடிசாவில் பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ், ஜகத்சிங்பூர் மற்றும் புரி ஆகிய இடங்களில் கன மழை பெய்யும்.

மீட்புப் படை: இதனிடையே, இந்திய கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிக்கு கப்பல்கள், விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையைச் (என்டிஆர்எப்) சேர்ந்த 13 குழுக்கள் விமானப்படை விமானங்கள் மூலம் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கொண்டு செல்லப்பட்டு தயாராக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சகம் முன்னெச்சரிக்கை: டானா புயல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வடகிழக்கு பிராந்திய இந்தியக் கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) கடலில் உயிர்களையும், சொத்துகளையும் பாதுகாக்க தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிலைமையை ஐ.சி.ஜி. உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. புயல் தாக்கத்தால் ஏற்படும் எந்தவொரு அவசர நிலையையும் கையாள்வதற்கான தயார் நிலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அது எடுத்துள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வழக்கமான வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை ஒளிபரப்ப மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் உள்ள கப்பல்கள், விமானங்கள் மற்றும் தொலைதூர இயக்க நிலையங்களை ஐ.சி.ஜி பணியமர்த்தியுள்ளது. இந்த எச்சரிக்கைகள் அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. மீன்பிடி படகுகள் உடனடியாக கரைக்குத் திரும்பி பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஐ.சி.ஜி அதன் கப்பல்களையும், விமானங்களையும் கடலில் எந்தவொரு அவசர சூழ்நிலையையும் விரைவாக எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு நிலை நிறுத்தியுள்ளது. கூடுதலாக, ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள எதிர்வினையை உறுதி செய்வதற்காக உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஐ.சி.ஜி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

புயல் கரையைக் கடந்து செல்லும் வரை கடலுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்கரையோரத்தில் உள்ள மீனவ சமூகங்களுக்கு கிராமத் தலைவர்கள் உட்பட பல்வேறு அலைவரிசைகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் உள்ளது. உதவி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வழங்க பேரிடர் நிவாரண குழுக்கள் மற்றும் உபகரணங்கள் தயாராக உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி? - குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் நாளை (அக்.24) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x