Published : 30 Apr 2014 08:43 AM
Last Updated : 30 Apr 2014 08:43 AM
ஆந்திர மாநிலம் தெலங்கானா பகுதியில் புதன்கிழமை தேர்தல் நடைபெறும் நிலையில் கட்சித் தலைவர்கள் அடுத்தகட்டமாக சீமாந்தி ராவிற்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக தெலங்கானா பகுதியில் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக சீமாந்திரா பகுதியில் உள்ள 175 சட்டமன்றம், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ.க, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜெய் ஒருங் கிணைந்த ஆந்திரா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
சீமாந்திராவில் ஏறக்குறைய காங்கிரஸ் வெறும் கவுரத்திற்காக மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. தெலுங்கு தேசம்-பா. ஜ.க கூட்டணி பலம் பெற்று விளங்குகிறது. இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பல முன்னாள் மாநில, மத்திய அமைச்சர்கள் தெலுங்கு தேச கட்சியில் இணைந்துள்ளனர். இதே சமயத்தில் இந்த கூட்டணிக்கு ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி கடும் போட்டியாக விளங்குகிறது. சீமாந்திராவில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. தற்போது தெலங்கானாவில் பிரச்சாரம் முடிவடைந்ததால் இதன் கட்சி தலைவர்கள் சீமாந்திராவில் பிரச்சாரம் செய்ய களம் இறங்கி உள்ளனர். திருப்பதியில் புதன்கிழமை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். வியாழக்கிழமை மோடி, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு, மற்றும் ஜன சேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி, நெல்லூர், குண்டூர், பீமாவரம், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் சூறாவளி பிரச்சாரம் செய்ய உள்ளனர். மேலும் காங்கிரஸ் சார்பில் அதன் துணை தலைவர் ராகுல் காந்தி சீமாந்திரா மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சோனியா காந்தியும் சீமாந்திரா பகுதிகளில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயலட்சுமி, தங்கை ஷர்மிளா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஜெய் ஒருங்கிணைந்த ஆந்திரா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில மாஜி முதல்வருமான கிரண்குமார் ரெட்டி இம்முறை போட்டியிடவில்லை என்றாலும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இவருடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சீமாந்திராவில் நடைபெறும் தேர்தலில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, இவரது தாயார், விஜயலட்சுமி, நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை ரோஜா, மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி மற்றும் பல முன்னாள் மாநில, மத்திய அமைச்சர்கள் எதிர்காலம் அடங்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT