Published : 23 Oct 2024 05:16 AM
Last Updated : 23 Oct 2024 05:16 AM
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் ஆர்ஜேடி.க்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகள் முதல்கட்டதேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும்25-ம் தேதி முடிவடைய உள்ளது.ஜார்க்கண்டில் பாஜக கூட்டணிதொகுதிப் பங்கீட்டை சுமுகமாகமுடித்து, வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப் படாமல் உள்ளது.
ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜேஎம்எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் 70 தொகுதிகளில் போட்டியிடும், எஞ்சிய 11 தொகுதிகள் கூட்டணியின் பிற கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என ஜேஎம்எம் தலைவரும் மாநில முதல்வருமான ஹேமந்த்சோரன் அண்மையில் அறிவித்தார். இதற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆர்ஜேடி கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும்19 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என அச்சுறுத்தியது.
இதையடுத்து கருத்து வேறுபாடுகளை களைவதற்கு ஹேமந்த் சோரனும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் நேற்று முன்தினம் 2 முறை சந்தித்துப் பேசினர். இதுகுறித்து ஆர்ஜேடி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ஜேஎம்எம் எங்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க முன்வந்தது. ஆனால் 9 தொகுதிகள் கோரினோம். இறுதியாக எங்களுக்கு 8 தொகுதிகளை ஜேஎம்எம் ஒதுக்கும் என நம்புகிறோம்" என்றார்.
இதற்கிடையில் இண்டியா கூட்டணியில் உள்ள சிபிஐ (எம்எல்) கட்சி 5 தொகுதிகள் கோரியுள்ளது. பிற இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாததால் தனித்து போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT