Published : 23 Oct 2024 04:59 AM
Last Updated : 23 Oct 2024 04:59 AM

பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்னவருக்கு நூதன தண்டனை: ஜாமீன் பெறுவதற்காக தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம்

தேசியக் கொடிக்கு வணக்கம் தெரிவிக்கும் ஃபைசல்.

ஜபல்பூர்: பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பியவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு தேசியக் கொடிக்கு 21 முறை வணக்கம் தெரிவிக்குமாறும், பாரத் மாதா கீ ஜே என்று கூறுமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் ஃபைசல் நஸர். இவர் அண்மையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத், இந்தியா முர்தாபாத் (பாகிஸ்தான் வாழ்க, இந்தியா ஒழிக) என்று கோஷங்களை எழுப்பினார்.

இதையடுத்து ஃபைசல்கைது செய்யப்பட்டு ஜபல்பூரிலுள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ரூ.50 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு மற்றொருவரின் உத்தரவாதத்தின் பேரிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும், போபாலில் உள்ள மிஸ்ராட் போலீஸ் நிலையத்துக்கு ஒவ்வொரு மாதமும் முதலாவது மற்றும் 4-வது செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் ஃபைசல் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் விதித்தது. அதுமட்டுல்லாமல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடும் முன்னர் அங்குள்ள தேசியக் கொடியை 21 முறை வணங்க வேண்டும் என்றும், பாரத் மாதா கீ ஜே என்று கோஷமிடவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பாரத் மாதா கீ ஜே: இதையடுத்து நேற்று மிஸ்ராட் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஃபைசல் 21 முறை தேசியக் கொடியை வணங்கினார். பின்னர் பாரத் மாதா கீ ஜே என்றும் கோஷம் எழுப்பினார். அப்போது ஃபைசல் கூறும்போது, “பாரத மாதாவை நான் வணங்குகிறேன். என்னுடைய தவறை நான் ஒப்புக்கொண்டேன். நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு கையெழுத்திடுவேன். இந்தத் தவறை நான் மீண்டும் செய்ய மாட்டேன். இதுபோன்ற தவறை யாரும் செய்ய வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொள்வேன்‘‘ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x