Last Updated : 23 Oct, 2024 04:39 AM

 

Published : 23 Oct 2024 04:39 AM
Last Updated : 23 Oct 2024 04:39 AM

பூமி, உடல், சுற்றுச்சூழலை பாதுகாக்க உயிர் சக்தி வேளாண்மை அவசியம்: கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் வலியுறுத்தல்

பெங்களூருவில் நேற்று இந்திய உயிர் சக்தி வேளாண் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வில் அந்த அமைப்பின் தலைவர் கே.சந்திரசேகரன் உரையாற்றினார்.

பெங்களூரு: பூமியையும் சுற்றுச்சூழலையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உயிர் சக்தி வேளாண்மை இன்றியமையாதது என கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.

இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய‌ மாநாடு பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதன் தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில், கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், கன்னட எழுத்தாளர் சித்தராமையா, முனைவர் சுல்தான் இஸ்மாயில், உயிர் சக்தி வேளாண் நிபுணர்கள் மகேஷ்மெல்வின், நவனீத கிருஷ்ணன், பல்லடம் பழனிசாமி, ஜெயசந்திரன் அரியனூர் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் பேசியதாவது: இந்தியாவில் உயிர் சக்தி வேளாண் கலாச்சாரம் மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. இந்த வகை வேளாண் முறையால் மரபான வேளாண்மையும், சுற்றுச்சூழலும் மேம்படுகிறது. மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியுள்ளதால் இயற்கை விவசாயம், உயிர் சக்தி வேளாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

ரசாயனத்தை தவிர்க்கும் இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம்மண்ணின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், விவசாய உற்பத்தியும் மேம்படுகிறது. இந்த முறையால் விவசாயிகள் எவ்வித சிக்கலும் இல்லாமல் நிலையான வாழ்வாதாரத்தை பெற்றுள்ளனர்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு உற்பத்தி அமைப்பைஉருவாக்க வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூமியை சுற்றி அதிகரிக்கும் சுற்றுச்சூழல் ஆபத்துகளும் அதன் அத்தியாவசியத்தை நமக்கு வலியுறுத்துகின்றன. பூமியையும் சுற்றுச்சூழலையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உயிர் சக்தி வேளாண்மை இன்றியமையாதது.

இயற்கை வேளாண்மை, உயிர் சக்தி விவசாய முறைகள் சிறு விவசாயிகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை தரும். இதில் கடைப்பிடிக்கப்படும் உத்திகள் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்கின்றன. நவீன வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய இரண்டையும் சமநிலையுடன் நீண்டகாலத்துக்கு முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் இந்திய உயிர்சக்தி வேளாண் கூட்டமைப்பின் தலைவர் கே.சந்திரசேகரன் உள்ளிட்ட உயிர் சக்தி வேளாண் நிபுணர்கள், உயிர் சக்தி வேளாண்மையின் வரலாறு, நடைமுறை உத்திகள், எதிர்கொள்ளும் சவால்கள், பருவநிலை மாற்றங்களின் அபாயம், உயிர் சக்திவேளாண்மையை வருங்காலத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்தல் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுரை வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x