Published : 23 Oct 2024 04:11 AM
Last Updated : 23 Oct 2024 04:11 AM

உக்ரைன் போரை நிறுத்த எல்லா வகையிலும் உதவ தயார்: ரஷ்யாவில் அதிபர் புதினிடம் மோடி உறுதி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யாவின் கசான் நகருக்கு சென்றார். அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.படம்: பிடிஐ

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார். அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து பேசினார். உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி பிரிக் (BRIC) அமைப்பு தொடங்கப்பட்டது. முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருந்தன. ஓராண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இணைந்தது. இதன்பிறகு இந்த அமைப்பு பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கப்பட்டது. கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்தன.

இந்த சூழலில் பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று கசான் நகருக்கு சென்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின்பேரில், 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து கசான் புறப்படுகிறேன். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. உலகளாவிய வளர்ச்சித் திட்டம், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, சூழ்நிலைக்கு ஏற்ற விநியோக சங்கிலிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். எனது ரஷ்ய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் தலைவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கசான் நகரில் ரஷ்ய அதிபர் விளா டிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் ஆரத் தழுவி பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அப்போது அதிபர் புதின் கூறும்போது, “பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். இரு நாடுகள் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது. இது தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். ரஷ்யாவின் கசான், எக்கத்தரீன்புர்க் நகரங்களில் இந்திய தூதரகங்கள் திறக்கப்படும்.இவ்வாறு மோடி பேசினார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் பங்கேற்று உள்ளார். ரஷ்ய அதிபர் புதினை அவர் நாளை சந்தித்து பேச உள்ளார். அப்போது உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ரஷ்ய அதிபர் புதின் சார்பில் பிரிக்ஸ் தலைவர்களுக்கு நேற்றிரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடினார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளன. இதன்படி இன்று காலையில் மூடிய அரங்கில் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதன்பிறகு இன்று மாலை திறந்த அரங்கில் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இரு நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

சீன அதிபருடன் பிரதமர் சந்திப்பு? - பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதன்பிறகு இரு நாடுகளிடையே போர் பதற்றம் எழுந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எல்லையில் போர் பதற்றம் தணிந்தது. இதன்பிறகு கடந்த 2022-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். ஆனால் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்த சூழலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்று உள்ளனர். இதற்கு முன்பாக லடாக் எல்லையில் சுமுகமாக ரோந்து பணியை மேற்கொள்ள இந்தியா, சீனா இடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரு நாடுகளின் எல்லையில் 4 ஆண்டுகள் நீடித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது.

எனவே பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிக்ஸ் மாநாட்டை நிறைவு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லிக்கு திரும்புகிறார். இதன்பிறகு நாளை கசான் நகரில் ‘பிரிக்ஸ், குளோபல் சவுத்’ மாநாடு நடைபெற உள்ளது. இதில் 28 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு பங்கேற்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x