Published : 22 Oct 2024 07:19 PM
Last Updated : 22 Oct 2024 07:19 PM
புதுடெல்லி: வக்ஃப் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் காரசாரமாக உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, பாட்டிலை உடைத்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வக்ஃப் (திருத்த) மசோதா 2024 தொடர்பான கூட்டுக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (அக்.22) நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்பியுமான ஜகதாம்பிகா பால் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுவின் கருத்துகளைக் குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாஜகவின் அபிஜித் கங்கோபாத்யாய உடன் கல்யாண் பானர்ஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ஒரு கண்ணாடி தண்ணீர் பாட்டிலை உடைத்து, ஜெகதாம்பிகா பாலை நோக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதில், கல்யாண் பானர்ஜியின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவரை கூட்ட அறையில் இருந்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் வெளியே அழைத்து வந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, கல்யாண் பானர்ஜி வக்ஃப் கூட்டுக் குழுவில் இருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதாம்பிகா பால், "எனது 40 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கையில், நான் பல குழுக்களின் தலைவராக இருந்திருக்கிறேன். பல தருணங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று நடந்தது போன்ற ஒரு சம்பவத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்தச் சம்பவம் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்துள்ளேன்.
இது ஒரு பெரிய சம்பவம். முதல் முறையாக கூட்டத்தை ஒத்திவைத்தோம். மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், நாட்டுக்கு என்ன செய்தி சென்றது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அதன் உறுப்பினரும் அவர்களது நடத்தை பற்றி சிந்திக்க வேண்டும். தங்கள் குற்றங்களை தெரிவிக்க நான் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறேன். எனது தலைமை வேண்டாம் என்றால் நான் இந்தக் குழுவில் இருந்து நான் ராஜினாமா செய்ய தயார்" என குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...