Published : 22 Oct 2024 02:07 PM
Last Updated : 22 Oct 2024 02:07 PM

‘சீன எல்லையில் இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது எப்போது?’ - ராணுவத் தளபதி விளக்கம்

புதுடெல்லி: 2020ல் இருந்த நிலைக்குத் திரும்பிய பிறகே சீன எல்லையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ள நமது படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராணுவத் தளபதி உபேந்திரா திவேதி, “ஏப்ரல் 2020-க்கு முன் இருந்த நிலைக்கு தற்போதைய நிலைமையை மாற்ற விரும்புகிறோம். அதன்பிறகே, படை விலக்கல் குறித்து நாங்கள் ஆராய்வோம். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்ப்பதற்கான நம்பிக்கையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது நம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய - சீன எல்லையில் ரோந்துப் பணி ஏற்பாடுகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்த உள்ள அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதில் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இது 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்க்கும். இதில் நாங்கள் அடுத்தகட்ட நகர்வுக்கு முயற்சி செய்வோம்” என விக்ரம் மிஸ்ரி கூறினார்.

ரஷ்யாவில் நடக்க இருக்கும் 16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில், எல்லைக் கட்டுப்பட்டு கோடு அருகே ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்த அறிவிப்பு வந்துள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x