Published : 22 Oct 2024 12:29 PM
Last Updated : 22 Oct 2024 12:29 PM
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வரும் வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள ஒடிசா தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
“புயலை எண்ணி அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அரசு முழுவீச்சில் தயாராக உள்ளது. வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், தீயணைப்பு படையும் தயார் நிலையில் உள்ளது. புயல் நிலவரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு, சாலை போக்குவரத்து போன்றவற்றில் இடையூறு ஏற்பட்டால் விரைந்து தீர்வு காணப்படும். அது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி திட்டமிட்டுள்ளோம். அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் அல்லது அதிக விலை வைத்து விற்பனை செய்வது போன்றவற்றை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” என முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.
ஒடிசாவில் மூன்று மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதோடு மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டானா புயலால் வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, வங்கதேசத்தில் மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT