Published : 22 Oct 2024 09:21 AM
Last Updated : 22 Oct 2024 09:21 AM
புதுடெல்லி: பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்' (BRICS) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷ்யாவில் உள்ள காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின்போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்த இருக்கிறார்.
இதனை ஒட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய அதிபர் புதின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக நான் இன்று ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறேன். 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறேன்.
உலகளாவிய வளர்ச்சி, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாச்சாரம் மற்றும் மக்களை மக்களுடன் இணைப்பது போன்றவற்றில் கலந்துரையாடலுக்கான முக்கிய தளமாக உருவான பிரிக்ஸ் அமைப்பிற்குள் உள்ள நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கையால் நிகழ்ந்த பிரிக்ஸ் விரிவாக்கம் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நன்மைக்கான உரையாடல்களை, திட்டங்கள் வகுத்தலை ஊக்குவித்துள்ளது.
ஜூலை 2024-ல் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டின் அடிப்படையில், எனது கசான் பயணம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரிக்ஸ் மாநாடு குறித்து பேட்டியளித்திருந்த ரஷ்ய அதிபர் புதின், “பிரிக்ஸ் என்பது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. இந்தியப் பிரதமர் மோடி கூறியதுபோல் இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அமைப்பு. பிரிக்ஸ் உலகளாவிய தெற்கு, தென்கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியில் கவனத்தை குவிக்கிறது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் குறிப்பிடத்தக்க நிலப்பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்களிப்பு செய்யும் நாடுகளாக உருவெடுத்து வருகிறது.
சீனா மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவும் - சீனாவும் ஒரு தனித்துவ உறவைப் பேணுகிறது. எங்களது உறவு சர்வதேச ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கிறது.” என்று பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...