Published : 22 Oct 2024 03:57 AM
Last Updated : 22 Oct 2024 03:57 AM

நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல்: வயநாட்டில் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நேற்று ஆசி பெற்றார். படம்: பிடிஐ

புதுடெல்லி: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி நடத்தப்படும் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த நிலையில், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுஎம்.பி. ஆனார். 2024 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார்.

வயநாடு எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் சார்பில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் சத்யன் மோக்கேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், அத்தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்காகாந்தி நாளை பகல் 12 மணி அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிமுன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மனு தாக்கலின்போது காங்கிரஸ் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,சோனியா காந்தி, ராகுல் காந்திஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கல்பேட்டா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பேரணியாக (‘ரோடு ஷோ’) செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணியில் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பிரியங்கா காந்தி நேற்று ஆசி பெற்றார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்ததால், அவரது சகோதரிபிரியங்கா காந்திக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் தற்போது சோனியா, ராகுலுக்கு பிறகு அவர்களது குடும்பத்தின் 3-வது எம்.பி.யாக பிரியங்கா இடம்பெறுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x