Published : 22 Oct 2024 05:02 AM
Last Updated : 22 Oct 2024 05:02 AM
ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுபிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது ஏழுமலையான் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் 5உறுப்பினர்களை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழு விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு எதிராக ஹைதராபாத்தை சேர்ந்த இ.ராமாராவ் என்ற வழக்கறிஞர் சிவில் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “கலப்படம் செய்யப்பட்ட நெய் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உறுதிபட கூறியுள்ளார். இதில் இந்துக்களின் மனம் புண்படும்படி அவர் பேசியுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களிலும் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்றுகூறியிருந்தார்.
இந்த மனுவை ஹைதராபாத் சிவில் நீதிமன்ற தலைமை நீதிபதி ரேணுகா நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். நவம்பர் மாதம் 22-ம் தேதி பவன் கல்யாண் இதே நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு நியாயத்தை விளக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT