Published : 21 Oct 2024 01:25 PM
Last Updated : 21 Oct 2024 01:25 PM

“நவ.1- 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்காதீர்” - காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் மிரட்டல்

குர்பத்வந்த் பன்னுன்

புதுடெல்லி: நவம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுன் இன்று (திங்கள்கிழமை) புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சீக்கிய இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இரட்டைக்குடியுரிமை வைத்துள்ள சீக்கியர்களுக்கான நீதி (எஸ்எஃப்ஜெ) என்ற அமைப்பின் நிறுவனரான பன்னுன் கடந்த ஆண்டும் இதே நேரத்தில் இப்படியான எச்சரிக்கை விடுத்திருந்தார். முன்னதாக கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. பின்னர் இவை புரளி என்று தெரியவந்தது. இந்தப் பின்னணியில் குர்பத்வந்த் பன்னுனின் இந்த புதிய மிரட்டல் செய்தி வந்துள்ளது.

அதேபோல் மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டது உட்பட, கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களை இந்தியா குறிவைத்து தாக்குவதாக அந்நாடு குற்றச்சாட்டு வைத்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள பின்னணியிலும் இந்த புதிய மிரட்டல் வந்துள்ளது.

பன்னுனின் மிரட்டல்கள்: கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதத்தில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்துக்கு வேறுபெயரிடப்படும், நவம்பர் 19-ம் தேதி விமான நிலையம் மூடப்படும் என்றும் வீடியோ மூலம் செய்தி வெளியிட்டிருந்தார். அன்றைய தினம் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

அதேபோல் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் அவரைக் கொல்ல சதி நடப்பதாக செய்தி வெளியான நிலையில், டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்போ இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தான் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தாண்டு குடியரசு தினத்தன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் கவுரவ் யாதவை கொலை செய்யப் போவதகாக மிரட்டல் விடுத்திருந்தார். ஜன.26-ம் தேதி பகவந்த் மானை கொல்ல தீவிரவாதிகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

சீக்கியர்களுக்கு தனி இறையாண்மை கொண்ட நாடு வேண்டும் என்று கோரி வரும் எஸ்எஃப்ஜெ என்ற அமைப்பை வழிநடத்தி வரும் பன்னுன், தேசதுரோகம் மற்றும் பிரிவினைவாத குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். அதற்கு ஓராண்டுக்கு முன்பு, தேசவிரோதம் மற்றும் நாசகார செயல்களில் ஈடுப்பட்டதாக கூறி எஸ்எஃப்ஜெ அமைப்பை இந்தியா தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x