Published : 21 Oct 2024 08:08 AM
Last Updated : 21 Oct 2024 08:08 AM
பெங்களூரு: இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
ஐஏஎப் உலக விண்வெளி விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச விண்வெளி கருத்தரங்கம் இத்தாலி நாட்டின் தலைநகரான மிலன் நகரில் அண்மையில் நடந்தது. இதில் இஸ்ரோ அமைப்பின் சார்பில் இந்தியா முன்னெடுக்கும் விண்வெளி ஆய்வு பணிகளுக்கும், சந்திரனின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 திட்ட பணிகளுக்கும் வெகுவாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள சோம்நாத்துக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த அங்கீகாரம் விண்வெளி ஆய்வு துறையில் இந்தியா செய்த பங்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் நிகழ்ந்துள்ள இந்த சாதனை புதிய இலக்குகளை நோக்கி பயணப்பட வைத்துள்ளது. குறைந்த பொருட்செலவில் நேர்த்தியான பொறியியல் அறிவியலைக் கொண்டு சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று, இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஐஏஎப் பாராட்டியுள்ளது.
இந்த திட்டத்தில் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்டு, குழுவினரை இலக்கை அடைய செய்ததில் சோம்நாத்தின் பங்கு மகத்தானது. அவரது வழிகாட்டுதலின்படியே, சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சந்திரன் குறித்த புதிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக மாறியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விண்வெளி தினம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில், இந்த நாளை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT