Last Updated : 21 Oct, 2024 09:03 AM

2  

Published : 21 Oct 2024 09:03 AM
Last Updated : 21 Oct 2024 09:03 AM

நாங்கள் ஒரு கரப்பான் பூச்சியைக்கூட கொன்றதில்லை: சல்மான் தந்தை கருத்துக்கு பிஷ்னோய் சமூகத் தலைவர் எதிர்ப்பு

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸின் மூத்ததலைவரான பாபா சித்திக் மும்பையில் கடந்த 12-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு சர்வதேச குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இதைதொடர்ந்து, பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொல்ல லாரன்ஸ் கும்பல் குறி வைத்துள்ள விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான் சிங்காரா மான்வேட்டையில் ஈடுபட்டது காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் பிஷ்னோய் சமூகத்துக்கு சொந்தமாக ஜோத்பூரில் உள்ள குரு ஜம்பேஷ்வர் கோயிலுக்கு வந்து சல்மான் மன்னிப்பு கேட்டால், அவரை விட்டுவிடுவதாகவும் லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இது குறித்து சல்மானின் தந்தை சலீம்கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘மான் உள்ளிட்ட எந்த வகை வேட்டையிலும் எனது மகன் ஈடுபட்டதில்லை. இதுநாள் வரை கரப்பான் பூச்சியைக்கூட எங்கள் குடும்பத்தினர் கொன்றது கிடையாது. விலங்குகளை நேசிக்கும் சல்மான் அவற்றை கொல்ல என்றும் முயன்றதில்லை. எனவே, யாரிடமும், எதற்காகவும் எனது மகன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை’’ எனகூறியிருந்தார்.

இது குறித்து பிஷ்னோய் சமூகத்தின் தேசியத் தலைவரான தேவேந்திரா பிஷ்னோய் கூறியதாவது: மான் வேட்டையாடப்பட்ட வழக்கில் சாட்சி கூறியவர்கள், காவல்துறையினர் பொய்யர்களா? ஆதாரங்களின் அடிப்படையில்தான் சல்மான் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தார்.

தற்போது மேல் முறையீட்டுவழக்குதான் நடைபெறுகிறது. சல்மான்கான் குடும்பத்தினர் பொய்யர்கள். மான்வேட்டையாடி சல்மான் குற்றம் செய்துள்ளார். இவர்களிடம் லாரன்ஸ் பணத்துக்காக எந்த பேரமும் பேசவில்லை. அவர் எங்கள் கிராமத்தில் மான் வேட்டையாடியதால்தான் லாரன்ஸுடன் சல்மானுக்கு மோதல். சல்மான் இங்கு எங்கள் சமூகத்தின் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கேட்பதால் யாரும் சிறுமைப்பட்டு விடுவதில்லை. இவ்வாறு தேவேந்திரா பிஷ்னோய் கூறியுள்ளார்.

இதனிடையே, சர்வதேச குற்றவாளியான லாரன்ஸ் தம் சொந்த விளம்பரத்துக்காக சல்மானை குறி வைத்திருப்பதாகக் கூறி வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இதைஜோத்பூரில் அதிகம் வாழும் பிஷ்னோய் சமூகத்தின் ஒரு பகுதியினர் ஊடகங்களில் லாரன்ஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x