Published : 29 Jun 2018 11:53 AM
Last Updated : 29 Jun 2018 11:53 AM

டிசம்பரில் மக்களவைத் தேர்தல்? -அறிகுறிகள் தென்படுகின்றன: தேவகவுடா கணிப்பு

 மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த, வலிமையாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. பல்வேறு மாநில கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க ஆர்வம் காட்டி வருகிறது. எனினும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்றவர்கள் ஒரணியாக செயல்பட்டு வருகின்றனர். பாஜகவையும், காங்கிரஸையும் விரும்பாத ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்களையும் தங்கள் அணியில் இணைக்க மாநில கட்சித் தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா கூறியதாவது:

‘‘பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், அரவிந்த் கேஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களை ஒன்றாக திரண்டுள்ளனர். எனினும் இதனை தேசிய அளவிலான கூட்டணியாக கருத முடியாது. மாநில அளவில் மட்டுமே கூட்டணிகள் அமையும். காங்கிரஸ் தலைமையுடன் எந்த முரண்பாடும் இல்லை.

கர்நாடகாவில் கூட்டணி அரசில் சிறுசிறு உரசல்கள் இருந்தாலும் அவை சரி செய்யப்பட்டு விடும். மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்புள்ளது. சில மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்ந்து நவம்பர் அல்லது டிசம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கிறேன். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் இதுபற்றி ஆலோசித்து வருவதாக தெரிய வருகிறது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது ஒன்றே எங்கள் குறிக்கோள்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x