Published : 21 Oct 2024 06:31 AM
Last Updated : 21 Oct 2024 06:31 AM

தண்ணீர் பாட்டில், மிதிவண்டிகளுக்கு ஜிஎஸ்டி குறைகிறது: வரி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர்கள் குழு விரிவான ஆலோசனை

புதுடெல்லி: 20 லிட்டர் தண்ணீர் பாட்டில், மிதிவண்டிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 5 சதவீதமாக குறைக்க அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில், பொருட்கள் மற்றும் சேவை களுக்கான வரியை மறுசீரமைப்பு செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் ஆடம்பரமான பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 25,000-க் கும் அதிகமான விலையுடைய கைக் கடிகாரங்களுக்கான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.15,000-க்கும் அதிகமான விலையுடைய காலணிகளுக்கான வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்த அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த வரி உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.22,000 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் 20 லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் மிதிவண்டிகளுக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.10,000-க்கும் குறைவான விலை கொண்ட மிதிவண்டிகளுக்கே இந்த வரி குறைப்பு செய்யப்பட உள்ளது.

இதேபோன்று, நோட்டு புத்தகங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை தற்போதைய 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டுக்கு விலக்கு மூத்த குடிமக்கள் அல்லாத தனிநபர்கள் ரூ.5 லட்சம் கவரேஜ் கொண்ட மருத்துவ காப்பீடுகளுக்கு செலுத்தும் பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சர் குழு முடிவு செய்துள்ளது.

அதேநேரம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான கவரேஜ் கொண்ட மருத்துவ காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகைக்கு தற்போதைய 18 சதவீத ஜிஎஸ்டி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு முழு விலக்கு அதேசமயம், மூத்த குடிமக்கள் செலுத்தும் மருத்துவ காப்பீடு மற்றும் டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த பரிந்துரைகள் தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு பின்னர் அது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x