Published : 20 Oct 2024 10:47 AM
Last Updated : 20 Oct 2024 10:47 AM

தாவூத் இப்ராகிமின் கூட்டாளிதான் பாபா சித்திக்: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர் மைல் பல்ஜித் சிங், ஹரியானாவை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ் யப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள்.

மேலும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த பிரவீன் லொங்கார். கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தின் பஹ்ரை பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார் பலகிராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள சிவகுமார், ஷுபம் ஆகியோரை மும்பை போலீஸார் மிக தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சூழலில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த யோகேஷ் என்பவரிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். ஒரு கொலை வழக்கில் டெல்லி சிறையில் இருக்கும் அவர் மும்பை போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “பாபா சித்திக் நல்ல மனிதர் கிடையாது. பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியாக அவர் செயல்பட்டார். இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இதன் காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்தார்.

மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பாபா சித்திக் கொலை வழக்கு தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த சிலரை கைது செய்துள்ளோம். அதில் ஒருவருடைய செல்போனில் பாபா சித்திக்கின் மகனும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஜீஷான் சித்திக்கின் புகைப்படம் இருந்தது. அவரை கொலை செய்யவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டு இருந்தது.

கடந்த 12-ம் தேதி இரவு ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்துக்கு பாபா சித்திக் சென்றார். இரவு 9.30 மணி அளவில் தந்தையும் மகனும் ஒன்றாக காரில் ஏற வந்துள்ளனர். அப்போது ஜீஷன் சித்திக்கின் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதன் காரணமாக அவர் மீண்டும் அலுவலகத்துக்கு சென்று செல்போனில் பேசியுள்ளார். பாபா சித்திக் மட்டும் காரில் ஏறி சென்றுள்ளார். அந்த நேரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த 3 பேர். பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

பாபா சித்திக்கை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தரப்பில் பலரிடம் பேரம் பேசப் பட்டு உள்ளது. சிலர் ரூ. 1 கோடி. வேறு சிலர் ரூ.50 லட்சம் வரை கேட்டுள்ளனர். இறுதியில் உத்தர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட சிவகுமார் என்பவர் தலைமையிலான கும்பல், பாபா சித்திக்கை கொலை செய்திருக்கிறது. தலைமறைவாக உள்ள சிவகுமாரை மிக தீவிரமாக தேடி வருகிறோம். கொலையில் ஈடுபட்டவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் பணம் கைமாறியிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான். குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கூலிப்படையாக செயல்பட்டு வந்தது. தற்போது மும்பையை சேர்ந்த பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்க அந்த கும்பல் திட்டமிட்டிருக்கிறது. இதற்காகவே பாபா சித்திக் கொலை செய்யப்பட்டு உள்ளார். சல்மான் கான் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x