Last Updated : 20 Oct, 2024 10:02 AM

 

Published : 20 Oct 2024 10:02 AM
Last Updated : 20 Oct 2024 10:02 AM

வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

புதுடெல்லி: காந்தி குடும்பத்தில் நான்காவது தலைவராக தென் மாநிலத்தில் களம் இறங்கி உள்ளார் பிரியங்கா வதேரா. இவர் போட்டியிடும் வயநாடு தொகுதியில் பல சவால்களை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

கங்கிரஸின் வலுவானப் பிரத கங்கிரஸின் வலுவானப் பிரதமராக கருதப்பட்ட இந்திரா காந்தி, மிசா சட்டத்தின் தாக்கத்தால் உபி.யின் ரேபரேலியில் தோல்வி அடைந்தார். இதனால் கர்நாடகாவின் சிக்மகளூர் இடைத்தேர்தலில் 1978-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பிறகு சோனியா காந்தி, ரேபரேலியுடன் கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியிலும் போட்டியிட்டார். கணவர் ராஜிவ் காந்தியின் படுகொலையால் உருவான அனுதாப அலையால் இவர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். மூன்றாவதாக ராகுல் காந்தி 2019-ல் அமேதிக்கு பிறகு இரண்டாவது தொகுதியாக வயநாட்டில் போட்டியிட்டார். அவர் சந்தேகித்தபடி அமேதி தோல்வியை அளிக்க, வயநாடு வெற்றியை தந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல், ரேபரேலி மற்றும் வயநாட்டில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார்.

இடைத்தேர்தல்: வயநாடு எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்ததால் அத்தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இங்கு பிரியங்கா களம் இறங்கியுள்ளார். தென் மாநிலத்தில் களமிறங்கிய, காந்தி குடும்பத்தின் நான்காவது தலைவர் பிரியங்கா ஆவார். வயநாட்டில் பிரியங்கா போட்டியால், காங்கிரஸ் முன் பல சவால்கள் நிற்கின்றன.

தொடக்கத்தில் பிரியங்காவுக்கு இருந்த செல்வாக்கை விட ராகுலுக்கு தற்போது கூடிவிட்டது. இருப்பினும் ராகுலை விட பிரியங்கா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என கேரளாவின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக கடுமையாக உழைக்கும் நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

இம்முறை வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் தாம் மற்றொரு தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறவில்லை. வயநாடு வாக்குப்பதிவு முடிந்த பிறகு ரேபரேலியில் திடீரென வேட்புமனு தாக்கல் செய்தார். இது, வயநாடு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இல்லை. இது, இத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பிரியங்கா வெற்றி பெற்றால் தற்போது நாடாளுமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு பிறகு காந்தி குடும்பத்தின் மூன்றாவது எம்.பி.யாக அவர் இடம் பெறுவார். இதனால் குடும்ப அரசியல் விமர்சனத்தை முன்வைக்கும் பாஜகவை காங்கிரஸ் சமாளிக்க வேண்டி வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x