Published : 08 Jun 2018 08:23 AM
Last Updated : 08 Jun 2018 08:23 AM
திருமலை வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் ‘ஸ்ரீவாரி பாதம்’ பகுதியில் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக யானைகளின் வருகை இல்லாமல் இருந்தது. ஆனால் ஏழுமலையானின் பாதம் இருப்பதாக நம்பப்படும் ‘ஸ்ரீவாரி பாதம்’ பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதை பக்தர்கள் கடந்த 2 நாட்களாக பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக பக்தர்கள் அளித்த தகவலின் பேரில் தேவஸ்தான வன அதிகாரிகள் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் யானைகள் சென்ற தடங்களை ஆய்வு செய்ததில் சுமார் 15 யானைகள் அப்பகுதியில் நடமாடுவதாக ஊர்ஜிதம் செய்தனர். இதையடுத்து தேவஸ்தான உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தேவஸ்தான வன அதிகாரிகள் கூறும்போது, “ஸ்ரீவாரி பாதம் பகுதியில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால், இம்மாத இறுதி வரை அன்னமய்யா வழித்தடம் மாலையில் மூடப்படும். யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாலை 4 மணி வரை மட்டுமே ‘ஸ்ரீவாரி பாதம்’ பகுதியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இப்பகுதிக்கு பக்தர்கள் வெள்ளை ஆடை உடுத்தி தனியாக வர வேண்டாம் என எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT