Last Updated : 20 Oct, 2024 08:01 AM

 

Published : 20 Oct 2024 08:01 AM
Last Updated : 20 Oct 2024 08:01 AM

தேர்தலில் சீட் வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: அமைச்சர் பிரஹலாத் சகோதரர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள நாக்தான் தொகுதியின் மஜத முன்னாள் எம்எல்ஏ தேவானந்த் ஃபுல்சிங் சவான். இவரது மனைவி சுனிதா சவான் (48) கடந்த வியாழக்கிழமை பெங்களூருவில் உள்ள பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறினார். முதல்கட்டமாக அவருக்கு ரூ.25 லட்சம் பணமாக கொடுத்தேன். அடுத்தடுத்த வாரங்களில் கோபால் ஜோஷி, அவரது சகோதரி விஜயலட்சுமி ஜோஷி, அவரது மகன் அஜய் ஜோஷி ஆகியோருக்கு ரூ.1.75 கோடி கொடுத்தேன். ஆனால் சீட் வாங்கி தரவில்லை. எனவே என் பணத்தை திரும்ப கேட்டபோது, என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினர்” என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகாரின்பேரில் பசவேஸ்வரா நகர் போலீஸார் கோபால் ஜோஷி, அஜய் ஜோஷி. விஜயலட்சுமி ஜோஷி ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பெங்களூரு போலீஸார் மகாராஷ்டிர போலீஸாரின் உதவியுடன் கோபால் ஜோஷியை நேற்று கோலாப்பூரில் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அஜய் ஜோஷியை புனேவில் கைது செய்தனர். இது தவிர விஜயலட்சுமி, அவரது நண்பர் சோமசேகர் நாயக் ஆகிய 2 பேரையும் ஹுப்ளியில் கைது செய்தனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகஹலாத் ஜோஷி கூறுகையில், "நானும் எனது சகோதரரும் 32 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டோம். அவரோடு எனக்கு எந்த தொடர்பும் இல்லை. போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் என் சகோதரி என குறிப்பிட்டுள்ள பெண் யாரென்றே எனக்கு தெரியாது. ஏனெனில் எனக்கு உடன் பிறந்த சகோதரியே இல்லை” என விளக்கம் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x