Published : 19 Oct 2024 06:51 PM
Last Updated : 19 Oct 2024 06:51 PM
கொல்கத்தா: மருத்துவர்களின் கோரிக்கைகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாகவும், அதற்கு 4 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கோரினார்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவி பணியில் இருந்தபோது கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு, அந்த மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில சுகாதாரத் துறை செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும், போதுமான எண்ணிக்கையில் சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் ஆறு பேரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அரசு வரும் 21-ம் தேதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர்.
இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்து வரும் மருத்துவர்களை, மேற்கு வங்க தலைமைச் செயலர் மனோஜ் பந்த், உள்துறைச் செயலர் நந்தினி சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவர்களிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், "எனக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது சுகாதார சேவைகளை பாதிக்கக் கூடாது. நான். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாமை நான் ஏன் நீக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு துறையில் உள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் நீக்க முடியாது. ஒரு அதிகாரி நீக்கப்படுவதை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்? இது தர்க்க ரீதியானதா? நாங்கள் ஏற்கனவே காவல் துறை ஆணையர் (CP), மருத்துவக் கல்வி இயக்குநர் (DME) மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநர் (DHS) ஆகியோரை நீக்கியுள்ளோம். ஆனால் அந்தத் துறையில் உள்ள அனைவரையும் என்னால் நீக்க முடியாது.
உங்கள் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றும். சிலவற்றுக்கு கொள்கை முடிவுகள் தேவை. நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அரசுக்கு ஆணையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்கள் சிகிச்சைக்காக உங்களை நம்பி இருக்கிறார்கள். ஏழைகள் எங்கே போவார்கள்? தயவுசெய்து என் பதவியை மறந்து என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள். மருத்துவ மாணவி கொலை வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது. சிபிஐ உங்களுக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன். மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் உங்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறேன்.
மாநிலத்தில் 43 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உட்பட சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த 113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களின் பணியிடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இயல்புநிலையை மீட்டெடுக்க முன்வாருங்கள். தயவு செய்து அரசியலுக்கு அப்பாற்பட்டு, உங்களைச் சார்ந்திருக்கும் மக்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT