Published : 19 Oct 2024 04:33 PM
Last Updated : 19 Oct 2024 04:33 PM

ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்புக்கான அமைச்சரவை தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தி முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் வியாழக்கிழமை கூடிய அமைச்சரவை, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை அதன் அசல் தன்மையுடன் மீட்டெடுப்பதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. அமைச்சரவை நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது என்பது, ஜம்மு காஷ்மீர் மக்களின் அடையாளத்தை, அதன் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுப்பதற்கான நடைமுறையின் முதல் செயல்முறையாகும்.

மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் விவகாரத்தினை பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசிடம் கொண்டு செல்வதற்கான முழு உரிமையையும் அமைச்சரவை முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளத்தையும் மக்களின் அரசியலமைப்பு உரிமையை பாதுகாப்பது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசின் முக்கியமான கொள்கையாகும்.

இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க வரும் நாட்களில் முதல்வர் டெல்லிக்குச் செல்ல இருக்கிறார். நவம்பர் 4-ம் தேதி ஸ்ரீநகரில் சட்டப்பேரவையைக் கூட்ட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் ஆற்றவேண்டிய உரையின் வரைவும் அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழு மேலும் விவாதித்து பரிசீலிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சரவையின் இந்த தீர்மானம் மாநில அந்தஸ்தை மீட்பதை மட்டுமே பேசுகிறது; சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வருவது பற்றி இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. மேலும், இது முற்றிலும் சரணடையும் நிலை மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகுதல் என்று தெரிவித்தன. மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாடு மற்றும் அவாமி இத்திஹாத் போன்ற அரசியல் கட்சிகள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. மேலும், சட்டப் பிரிவு 370 - 35 ஏ மற்றும் ஆக.5.2019-க்கு முந்தைய மாநில அந்தஸ்து மீட்பு என்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x