Published : 19 Oct 2024 03:47 PM
Last Updated : 19 Oct 2024 03:47 PM

உச்ச நீதிமன்றம் எதிர்க்கட்சியல்ல; அது மக்களின் நீதிமன்றம்: தலைமை நீதிபதி

பனாஜி: உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளதாகவும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமன்றமாக இருப்பதால், நாங்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நிறைவேற்றுகிறோம் என்று சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவாவில் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்தின் (SCAORA) முதல் மாநாட்டில் உரையாற்றிய தலைமை நீதிபதி சந்திரசூட், “கடந்த 75 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிக்கான அணுகல், நாம் தவறவிடக் கூடாத ஒன்று. சமூகங்கள் வளர்ச்சியடைந்து, செழுமையாகவும், செல்வச் செழிப்பாகவும் பரிணமிக்கும் போது, ​மிக முக்கிய நபர்கள் தொடர்பான வழக்கை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது. நமது நீதிமன்றம் அப்படிப்பட்டது அல்ல. நமது நீதிமன்றம் மக்கள் நீதிமன்றம். மக்கள் நீதிமன்றமாக உச்ச நீதிமன்றத்தின் பங்கு எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.

​​மக்கள் நீதிமன்றமாக இருப்பதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று சொல்ல முடியாது. தங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கும்போது உச்ச நீதிமன்றம் ஓர் அற்புதமான நிறுவனம் என்று நினைப்பவர்கள், அதுவே அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது அதனை ஒரு கேவலமான நிறுவனமாகப் பார்க்கிறார்கள். இது ஒரு ஆபத்தான கருத்து.

உச்ச நீதிமன்றத்தின் பணியை விளைவுகளின் கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்க முடியாது. தனிப்பட்ட வழக்குகளின் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு எதிராக இருக்கலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திர உணர்வுடன் நீதிபதிகள் முடிவெடுக்க உரிமை உண்டு.

சட்டத்தின் முரண்பாடு அல்லது பிழைக்காக நீதிமன்றத்தை விமர்சிக்க ஒருவருக்கு உரிமை உண்டு. நீதிபதிகளுக்கு இதில் எந்த சிரமமும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அதன் பங்கை அல்லது அதன் வேலையை விளைவுகளின் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.

உச்ச நீதிமன்றம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மின்னணு முறையில் வழக்குகளை தாக்கல் செய்தல், வழக்கு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், அரசியலமைப்பு அமர்வு வாதங்களை பேச்சிலிருந்து உரையாக மாற்றுதல், நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு என தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் நிறைய செய்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நீதிமன்ற நடவடிக்கை என்பது 25, 30 அல்லது 50 வழக்கறிஞர்களுடன் குறிப்பிட்ட நீதிமன்ற அறைக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அது 2 கோடி நபர்களுக்குச் செல்கிறது. லைவ் ஸ்ட்ரீமிங் என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் பணியை வீட்டிற்கும் மக்களின் இதயத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளது என்று நான் நம்புகிறேன்.

பி.எம்.எல்.ஏ-வின் கீழ் இரண்டு ஆண்டுகளாக காவலில் உள்ள ஒருவரின் சிறிய ஜாமீன் விண்ணப்பம், யாரோ ஒருவரின் ஓய்வூதிய நிலுவைத் தொகை, யாரோ ஒருவரின் பணி ஓய்வு நிலுவைத் தொகை, எளிய மனிதர்களின் இந்த சாதாரண பிரச்சினைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் தீவிர கவனத்தை ஈர்க்கின்றன.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x