Published : 19 Oct 2024 09:23 AM
Last Updated : 19 Oct 2024 09:23 AM
ஜெய்ப்பூர்: துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. தீவிர பரிசோதனைக்குப் பின்னர் விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் IX-196 துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஜெய்ப்பூர் விமானநிலைய காவல்நிலையத்துக்கு தகவல் வந்தது. விமானிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் 1.20 மணியளவில் ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. விமானத்தில் இருந்த 189 பயணிகளும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.
பின்னர் விமானத்தில் முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகள், அவர்களது உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டன. விமானத்தில் சந்தேகத்துக்குரிய பொருள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறை அறிவித்தது.
விஸ்தாரா விமானத்துக்கும் மிரட்டல்: இதேபோல் தலைநர் புதுடெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற விஸ்தாரா விமானத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது
உடனடியாக பிராங்பர்ட் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிராங்பர்ட் விமான நிலையத்துக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. தீவிர சோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு எதுவும் விமானத்தில் இல்லை, அது வெறும் புரளி என்பது உறுதியானது.. இதையடுத்து, விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக லண்டன் சென்று சேர்ந்தது.
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது 6-வது நாளாக தொடர்ந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) மட்டுமே இரண்டு விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT