Published : 30 Jun 2018 08:54 AM
Last Updated : 30 Jun 2018 08:54 AM
மாநில செய்திக் தொடர்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் பங்கு பெற கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரபிரதேச காங்கிரஸ் நேற்று நுழைவுத் தேர்வு நடத்தியது.
சமூக இணையதளங்கள் மற்றும் ஊடகங்களின் வளர்ச்சியால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திறமைவாய்ந்த செய்தி தொடர்பாளர்கள் அவசியமாகிறது. இவர்கள் அளிக்கும் தகவல் மற்றும் எதிர்கட்சிகளுக்கான பதில்களைப் பொறுத்து அவர்கள் கட்சியின் புகழ் பரவுகிறது. அதேநேரத்தில் தவறான தகவல்களைச் சொன்னால் அவர்களது கட்சியை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி விடுகிறது.
இதன் காரணமாக வட மாநிலங்களில்அரசியல் கட்சிகள் பல வருடங்களாக பதவி வகிக்கும் செய்தித் தொடர்பாளர்களை மாற்றி புதியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளன. தேசிய கட்சியான காங்கிரஸின் உ.பி. பிரிவு ஒருபடி மேலாக நுழைவுத் தேர்வினை நடத்த முடிவு செய்தது. இதற்காக ஏற்கெனவே இருந்த ஊடகக்குழுவின் பிரிவை உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் கலைத்திருந்தார்.
புதிய செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர்களுக்காக நேற்று எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வையும் நடத்தினார். இதில் மொத்தம் 70 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் வரலாறு மற்றும் பொது அறிவு குறித்து 14 கேள்விகள் அளிக்கப்பட்டன. நாடாளுமன்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராஜ்பப்பர், தேசிய செய்தித் தொடர்பாளரான பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடக அமைப்பாளர் ரோஹன் குப்தா ஆகியோர் நேர்முகத் தேர்வையும் நடத்தினர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘ஏற்கெனவே கர்நாடகா உட்பட மூன்று மாநிலங்கள் கடைப்பிடித்த தேர்வுமுறை, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, மற்ற மாநிலங்களும் இதே முறையை கடைப்பிடிக்க தலைவர் ராகுல் காந்தி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கிறோம்’’ எனத் தெரிவித்தனர்.
உ.பி. காங்கிரஸில் ஊடகப் பிரிவில் 20 மற்றும் 12 செய்தித் தொடர்பாளர்கள் புதிதாகப் பதவி அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்காக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் இணையதள வசதிகளுடனான மொபைல்கள் அனுமதிக்கப்பட்டன. இவற்றில் கூகுள் மூலம் பதில்களைப் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டது. தேர்வில் வெற்றிபெற சிலர் பல்கலைகழகப் பேராசிரியர்களிடம் பயிற்சி பெற்று வந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT