Published : 18 Oct 2024 05:44 PM
Last Updated : 18 Oct 2024 05:44 PM
புதுடெல்லி: அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் 18 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயினுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் தாமதம் மற்றும் நீண்ட நாட்கள் சிறைவாசம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, "விசாரணையில் தாமதம், 18 மாதங்கள் நீண்ட சிறைவாசம் மற்றும் வழக்கு விசாரணை தொடங்க நீண்ட நாட்களாகும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவர் நிவாரணம் பெற தகுதி உடையவர்" என்று கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், பிஎம்எல்ஏ போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் வரும் வழக்குகளில் தனிமனித சுதந்திரத்தை நீதிபதிச் சுட்டிக்காட்டினார்.
சத்யேந்திர ஜெயினுக்கு ரூ.50,000-க்கான தனிநபர் ஜாமீன் பத்திரம், அதே தொகைக்கு இரண்டு பேர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாட்சிகளுடனோ, வழக்குடன் தொடர்புடைய தனி நபர்களுடனோ தொடர்பு கொள்ளக் கூடாது, விசாரணையில் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்தக் கூடாது, நீதிமன்றத்தில் முன் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்ல கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சத்தியேந்திர ஜெயின் தன்னுடன் தொடர்புடைய நான்கு நிறுவனங்களின் மூலமாக பணமோசடி செய்ததாக கடந்த 2022-ம் ஆண்டு மே 30-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டதின் கீழ் மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சந்தியேந்திர ஜெயின் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு தொடர்ந்திருந்தது.
முன்னதாக கடந்த 2022, மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்திர ஜெயினுக்கு 2023, மே 26-ம் தேதி மருத்துவக் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT