Published : 18 Oct 2024 12:11 PM
Last Updated : 18 Oct 2024 12:11 PM
மும்பை: சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் உடன் பேச சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி முயற்சித்து வருகிறார். அதனால் சமூக வலைதள பதிவு மூலம் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அவர் தூது விட்டுள்ளார்.
“சகோதரர் லாரன்ஸுக்கு வணக்கம். நீங்கள் சிறையில் இருந்தாலும் வீடியோ அழைப்பு மூலம் வெளியில் உள்ளவர்களிடம் பேசுவீர்கள் என்பதை அறிவேன். அதனால் நான் உங்களுடன் சிலவற்றை பேச வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொண்டு பேசுவது. உலகில் ராஜஸ்தான் என்னுடைய பேவரைட் இடம். இருப்பினும் முதலில் உங்களுடன் வீடியோ காலில் பேச விரும்புகிறேன். இதை உங்களது நலனுக்காக சொல்கிறேன். என்னை நீங்கள் நம்பலாம். உங்களது மொபைல் எண்ணை எனக்கு கொடுக்கவும். நன்றி” என தனது இன்ஸ்டா பதிவின்மூலம் சோமி அலி தெரிவித்துள்ளார்.
“ஒருவரை கொல்வது அல்லது துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்துவது என்பது எல்லை மீறிய வெறிச்செயல். நான் வேட்டையாடுவதை ஆதரிக்கவில்லை. ஆனால், அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்த சம்பவம் நடந்தபோது சல்மான் கான் இள வயதுக்காரர். அதனால் பிஷ்னோய் இன தலைவருக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரை மன்னித்து விடுங்கள். அவர் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன். யாருடைய உயிரை பறிப்பதும் குற்றம் ஆகும். அது சல்மான் கானோ அல்லது சாமானிய மனிதனாக இருந்தாலும் சரி. உங்களுக்கு நீதி வேண்டுமென்றால் நீதிமன்றத்தை நாடலாம். அவரை கொள்வதால் உயிரிழந்த மானை கொண்டு வர முடியாது” என கடந்த மே மாதம் சோமி அலி தெரிவித்திருந்தார்.
கடந்த 12-ம் தேதி இரவு, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கான பாதுகாப்பை மகராஷ்டிர அரசு மீண்டும் பலப்படுத்தி உள்ளது. அவரை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர், 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக மகராஷ்டிரா காவல் துறை கருதுகிறது. இந்நிலையில், சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT