Published : 18 Oct 2024 11:28 AM
Last Updated : 18 Oct 2024 11:28 AM
மும்பை: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான நீண்ட கால பகையை முடிக்க சல்மான் கான் ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று ஒரு மிரட்டல் செய்தியை மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியுள்ளார். பணத்தை சல்மான் கான் கொடுக்கத் தவறினால், அவரது நிலைமை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மிரட்டல் செய்தியில், “சல்மான் கான் நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான பகையை முடித்துக்கொள்ள விரும்பினால் அவர் 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இதை அலட்சியம் செய்யவேண்டாம். அப்படிச் செய்தால், அவரின் நிலைமை பாபா சித்திக்கை விட மிகவும் மோசமாக இருக்கும்.” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
70 பேர்; காவல்துறை பகீர் தகவல்! சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (அஜித் பவார் அணி) சேர்ந்தவருமான பாபா சித்திக் கடந்த அக்.12ம் தேதி பாந்திராவில் தனது மகன் ஷீசான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சதியில் முக்கியமானவராக கருதப்படும் சுபம் லோங்கர், பாபா சித்திக்கின் கொலைக்கு பின்னால் லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சர்வதேச கிரிமினலான லாரன்ஸ் பிஷ்னோய் குறிவைத்துள்ளார். இவரது கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் சல்மான் கானை, 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக மகராஷ்டிரா காவல்துறை கருதுகிறது.
கொலை சதியின் பின்னணி: கடந்த ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஏப்ரலுக்குள் சல்மான் கானை, தான் கொலை செய்யப்போவதாக, லாரன்ஸ் அறிவித்திருந்தார். இந்த கால அவகாசம் முடிந்ததால் மகராஷ்டிர போலீஸார் சற்று பெருமூச்சு விட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 12-ம் தேதி இரவு, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கான பாதுகாப்பை மகராஷ்டிர அரசு மீண்டும் பலப்படுத்தி உள்ளது.
கடந்த 2018-ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜரான லாரன்ஸ் பிஷ்னோய், தான் சல்மானைக் கொல்ல இருப்பதாக முதன்முறையாக தெரிவித்திருந்தார். அப்போது முதல் சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பலால் ஆபத்து தொடர்ந்து வருகிறது.
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் கூட மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் மீது இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். அப்போது, மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் சல்மான் கான் வீட்டுககு நேரில் சென்று, லாரன்ஸ் கும்பலை மண்ணோடு மண்ணாக்குவோம் எனக் கூறி நம்பிக்கை தெரிவித்திருந்தார். பின்னர், லாரன்ஸ் கும்பலால் பாபா சித்திக் கொல்லப்பட, சல்மான் கான் மீதான ஆபத்து அதிகரித்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்தப் பின்னணியில்தான் சல்மான் கானை கொலை செய்ய சர்வதேச கிரிமினலான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் 24 மணி நேரமும் அவரைக் கண்காணித்து வருவதாக மகராஷ்டிரா காவல் துறை கருதுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...