Published : 29 Jun 2018 07:53 PM
Last Updated : 29 Jun 2018 07:53 PM
ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி நடக்காத பிரதமர் மோடியும், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் சர்வாதிகாரிகள் என்று சிவசேனா கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் நானார் எனும் இடத்தில் ரூ.30 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்த ஆலைஅமைந்தால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இந்த திட்டம் குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடானா ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதியுள்ளது. அதில் பிரதமர் மோடியையும், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸையும் கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
மஹாராஷ்டிராவில், ரத்னகிரி மாவட்டத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க அரசு அடிக்கல் நாட்டியது, புற்றுநோய் மருத்துவமனைக்கான அடிக்கல்லாகும். நச்சுத்தன்மை வாய்ந்த இந்த திட்டத்தால், மக்கள் புற்றுநோயாலும், காசநோயாலும், மார்பு தொடர்பான நோயாலும் பாதிக்கப்படுவார்கள். மக்களின் விருப்புத்துக்கு எதிராக கொண்டுவரப்படும் இந்த திட்டம், என்பது அவசரநிலையை நினைவூட்டுகிறது.
பிரதமர் மோடியும், முதல்வர் பட்நாவிஸும் தங்கள் அரசில் இருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை மூடிவிடுங்கள். இயற்கையை நேசிப்பவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்காக சிறப்பாக பணியாற்றும்போது, மத்தியஅரசு நச்சுத்தன்மை வாய்ந்த திட்டத்தை கொண்டுவந்து, சூழலை அழிக்க முயல்கிறது. நானார் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் அந்த சூழலுக்கு உகந்தது அல்ல, வேளாண்மையை அழிக்கும்.
மோடியும், பட்நாவிஸும் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார்கள். அவர்கள் ஏதேச்சதிகார ஆட்சி நடத்திக்கொண்டு, 43 ஆண்டுகளுக்கு முந்தைய எமர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். இவர்களின் செயல்பாடு கோமாளித்தனமாக இருக்கிறது.
சர்வாதிகாரி ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்றுகுவித்தார், நானார் சுத்திகரிப்புத் திட்டமும், சொந்த மண்ணில் வாழும் மக்களை கொன்றுகுவிக்கும் திட்டமாகும். மக்களின் வாழ்வாதார விவசாய நிலத்தை அழித்து, எரிவாயுதளமாக மாற்றும்.
ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் கருத்துக்குக்கு மரியாதையளிக்காவிட்டால், அது சர்வாதிகார ஆட்சி என்றுதான் கூற முடியும். ஜனநாயகத்தில், மக்கள் செத்துவீழ்ந்தால், ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், மன்னன் உயிர்வாழ வேண்டும். நம்முடைய வீரர்கள், விவசாயிகள் சாகலாம், ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்ற வார்த்தை செத்துவிட்டது.
இவ்வாறு சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT