Last Updated : 17 Oct, 2024 06:32 PM

 

Published : 17 Oct 2024 06:32 PM
Last Updated : 17 Oct 2024 06:32 PM

‘70 பேரின் 24 மணிநேர கண்காணிப்பில் சல்மான் கான்’ - லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறிவைப்பது ஏன்?

புதுடெல்லி: பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சர்வதேச கிரிமினலான லாரன்ஸ் பிஷ்னோய் குறிவைத்துள்ளார். இவரது கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் சல்மான் கானை, 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக மகராஷ்டிரா காவல் துறை கருதுகிறது.

கடந்த ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஏப்ரலுக்குள் சல்மான் கானை, தான் கொலை செய்யப்போவதாக, லாரன்ஸ் அறிவித்திருந்தார். இந்த கால அவகாசம் முடிந்ததால் மகராஷ்டிர போலீஸார் சற்று பெருமூச்சு விட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 12-ம் தேதி இரவு, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கான பாதுகாப்பை மகராஷ்டிர அரசு மீண்டும் பலப்படுத்தி உள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டில் ராஜஸ்தானின் ஜோத்பூர் காடுகளில் சல்மான் கான் ஒரு இந்திப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதே ஆண்டின் செப்டம்பர் 28-ல் அவர், அங்குள்ள ‘சிங்காரா’ எனும் அரிய வகை மான்களை வேட்டையாடியப் புகாரில் சிக்கினார். 1998-ம் ஆண்டு அக்.12-ல் கைதான சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் மீது வனவிலங்கு தடுப்பு, ஆயுதங்கள் தடை சட்டம் உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகளின் விசாரணை ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் ஒரு வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அவர், ஜோத்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் ஜாமீன் பெற்றார் சல்மான் கான். மேலும், இரு வழக்குகளில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் இந்த வழக்குகள் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2018-ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், ஒரு வழக்கு விசாரணைக்காக ஆஜரான லாரன்ஸ் பிஷ்னோய், தான் சல்மானைக் கொல்ல இருப்பதாக முதன்முறையாக தெரிவித்திருந்தார். அப்போது முதல் சல்மான் கானுக்கு லாரன்ஸ் கும்பலால் ஆபத்து தொடர்ந்து வருகிறது.

எனினும், கடந்த ஏப்ரல் மாதம் கூட மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் மீது இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். அப்போது, மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் சல்மான் கான் வீட்டுககு நேரில் சென்று, லாரன்ஸ் கும்பலை மண்ணோடு மண்ணாக்குவோம் எனக் கூறி நம்பிக்கை தெரிவித்திருந்தார். பின்னர், லாரன்ஸ் கும்பலால் பாபா சித்திக் கொல்லப்பட, சல்மான் கான் மீதான ஆபத்து அதிகரித்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

மும்பையில் நடிகர் சல்மான்கான் தங்கியுள்ள பாந்த்ராவின் கேலக்ஸி அடுக்கு மாடி குடியிருப்பு முழுவதும் காவல் துறை முகாம் போல் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த பாதுகாப்பு போலீஸாருடன் கூடுதலாக ஒரு படை அமர்த்தப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அவரது வீட்டு வளாகத்தின் வெளிப்பகுதியில் அமருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து செல்பவர்கள் பற்றிய விவரங்களை போலீஸார் பதிவு செய்து வருகின்றனர். சல்மான் கானின் தந்தை அப்பகுதியில் காலை நடைபயிற்சி செல்வது வழக்கம். இதை சில நாட்களுக்கு கைவிடும்படி மும்பை போலீஸார் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சல்மான்கானுக்கு மத்திய அரசின் சார்பில் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 11 பாதுகாப்பு காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் துப்பாக்கி பயிற்சி பெற்ற திறமையான இரண்டு கமாண்டோக்களும் உள்ளனர்.

சல்மான் கான் வெளியில் செல்லும்போது ஒரு போலீஸ் வாகனம் அவரை பின் தொடர்ந்து செல்கிறது. சல்மான் கான் செல்லும் படப்பிடிப்பு பகுதியில் காவல் நிலையத்துக்கு முன்கூட்டியே தகவல் அளித்து பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு யாரையும் சந்திக்காமலும், வெளியில் அதிகம் செல்லாமலும் இருக்கும்படி நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நிலை சல்மான் கானுக்கு அவரது நவி மும்பை பண்ணை வீட்டுக்குச் செல்லும் போதும் தொடரும். பாபா சித்திக்கின் கொலைக்கு பின் ஷுபு லோங்கர் என்பவர், ‘டிகம்பெனி தாவூத் மற்றும் நடிகர் சல்மான் கானுக்கும் உதவி செய்பவர்களை விடமாட்டோம்’ என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

லாரன்ஸ் கும்பலை சேர்ந்த இவர், பாபா சித்திக் கொலை வழக்கில் சிக்கிய 5 பேரில் ஒருவரது உடன்பிறந்த சகோதரர். இவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். நடிகர் சல்மான் கானை, லாரன்ஸ் கொலை செய்ய திட்டமிட்டதற்கு காரணம், அவர் சார்ந்த பிஷ்னோய் சமூகம்தான். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உபியில் அதிகம் வாழும் இந்த சமூகத்தினர் விலங்குகளையும், மரங்களையும் வணங்குபவர்கள்.

குறிப்பாக ‘சிங்காரா’ மான்களுக்கு, பிஷ்னோய் சமூகத்தினர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால், சல்மான் கான் மீதான ‘சிங்காரா’ மான் வேட்டைப் புகார் காரணமாக, லாரன்ஸ் அவருக்கு குறிவைத்துள்ளார். சல்மான் கானை கொல்ல முயற்சித்ததாக இதுவரையிலும் லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைதாகி உள்ளனர். இவர்கள் 5 பேருமே, சுமார் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். சல்மான் கான் கொலைக்காக ரூ.25 லட்சம் தருவதாக, லாரன்ஸ் உறுதி அளித்ததாக குற்றவாளிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, மகராஷ்டிர காவல் துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், சல்மான் கானை கொல்வதற்காக துருக்கி நாட்டின் ஜிகானா கைத்துப்பாக்கியை லார்ன்ஸ் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வகை கைத்துப்பாக்கியால்தான் பஞ்சாபின் பிரபல பாடகர் சித்து மூஸேவாலாவையும் லாரன்ஸ் கும்பல் சுட்டுக் கொன்றனர். எனவே, சல்மான் கானை லாரன்ஸ் கும்பலிடமிருந்து பாதுகாப்பது மகராஷ்டிர காவல் துறைக்கு பெரும் சவாலாகி விட்டது.

இந்தப் பின்னணியில்தான் சல்மான் கானை கொலை செய்ய சர்வதேச கிரிமினலான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் 24 மணி நேரமும் அவரைக் கண்காணித்து வருவதாக மகராஷ்டிரா காவல் துறை கருதுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x