Published : 17 Oct 2024 03:06 PM
Last Updated : 17 Oct 2024 03:06 PM

பிரதமர் மோடி முன்னிலையில் ஹரியானா முதல்வராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார். ஹரியானா சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் முன்கூட்டியே அறிவிக்கப்படாவிட்டாலும், முதல்வர் முகமாக நயாப் சிங் சைனி கருதப்பட்டார். இம்மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி 3வது முறையாக அக்கட்சி வெற்றி பெற்றது.

இதையடுத்து, ஹரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் பஞ்ச்குலாவில் நேற்று (அக்.16) நடைபெற்றது. இதில், கட்சியின் மத்திய பார்வையாளர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டதாக அமித் ஷா அறிவித்தார்.

இதையடுத்து, ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரோடு, அனில் விஜ், கிரிஷன் லால் பன்வார், ராவ் நர்பீர் சிங் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்ற என்டிஏ தலைவர்கள்: இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, மத்திய சாலை போக்குவரத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் படேல், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 18 முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா நடைபெற்றது.

நயாப் சிங் சைனி யார்?: 54 வயதாகும் நயாப் சிங் சைனி, ஹரியானா பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டாரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். கடந்த 30 ஆண்டுகளாக அவர் பாஜகவில் பயணித்து வருகிறார். முதன்முதலில் 2014 இல் நரேன்கர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற நயாப் சிங் சைனி, 2016 இல் மாநில அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.2019 மக்களவைத் தேர்தலில் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்ட இவர், காங்கிரஸ் கட்சியின் நிர்மல் சிங்கை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதையடுத்தே இவர் பிரபலமானார். ஹரியானா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து மாநிலத்தின் முதல்வராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்றார் நயாப் சிங் சைனி.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கட்சியின் முக்கிய முகமாகவும், முதல்வராகவும் இருந்து செயல்பட்ட நயாப் சிங் சைனி, கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், அக்கட்சி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதோடு, பிரதான மாநில கட்சியாக அறியப்பட்ட ஜனநாயக் ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு காலத்தில் வலிமைமிக்க அரசியல் சக்தியாக இருந்த இந்திய தேசிய லோக் தளம், இம்முறை வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் வெற்றிவாய்ப்பை தடுத்து நிறுத்தி, பாஜகவை வெற்றி பெறச் செய்ததில் நயாப் சிங் சைனி முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x