Published : 17 Oct 2024 01:52 PM
Last Updated : 17 Oct 2024 01:52 PM

அசாமில் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அசாமில் ஜன.1, 1966 முதல் மார்ச் 25, 1971 வரை புலம்பெயர்ந்து குடியேறியவர்களுக்கு அம்மாநில குடியுரிமையை உறுதி செய்யும் இந்திய குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் 4:1 என்ற பெரும்பான்மையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி கூறும்போது, சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் பிரச்சினைக்கு அசாம் ஒப்பந்தம் ஓர் அரசியல் தீர்வாகும் என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில், நீதிபதிகள் சூரிய காந்த், எம்.எம். சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இருந்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில், சட்டப்பிரிவு 6 ஏ-வின் செல்லுபடித்தன்மையை உறுதிபடுத்தினார். மேலும், “சிறிய நிலப்பரப்பு மற்றும் வெளிநாட்டினரைக் கண்டறிவதை ஒரு விரிவான செயல்முறையாக கருத்தில் கொண்டு பார்க்கும்போது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அசாமில் புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகமாகவே உள்ளது" என்றார்.

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா சார்பிலும் சேர்த்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சூரிய காந்த், தலைமை நீதிபதியின் தீர்ப்புக்கு இணங்குவதாக தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்துக்கு அத்தகைய விதியை இயற்றுவதற்கான சட்டமன்ற தகுதி உள்ளது என்று தெரிவித்தார். நீதிபதி பர்திவாலா மட்டும் மாறுபட்டு தீர்ப்பை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் சட்டப் பிரிவு 6ஏ அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறினார்.

அசாம் குடியுரிமை பெறுவதற்கு மார்ச் 25, 1971 கடைசி தேதி என்பது சரியானதே என்று அரசியல் சாசன அமர்வின் பெரும்பான்மை தீர்ப்பு உறுதி செய்தது. ஒரு மாநிலத்தில் பல்வேறு இனக்குழுக்கள் இருப்பதாலேயே சட்டப்பிரிவு 29(1) மீறுவதாகாது என்றும் தெரிவித்தது. மேலும், குடியுரிமைச் சட்டப் பிரிவு 6 ஏ-வின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்தது.

குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ என்பது கடந்த 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 25 வரை சட்டவிரோதமாக, குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறிவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. மத்திய அரசில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசுக்கும், அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்துக்கும் இடையில் அசாம் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடைமுறை 1985-ம் ஆண்டு இணைக்கப்பட்டது.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 1985-ன் படி, வங்கதேசம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ஜன.1, 1966 அல்லது அதற்கு பின்பு, ஆனால் மார்ச் 25, 1971-க்கு முன்பு அசாமுக்கு புலம்பெயர்ந்து வந்து, அதன் பின்பு அங்கு தொடர்ந்து வசித்துவருபவர்கள் குடியுரிமைச் சட்டம் பிரிவு 18-ன் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். இதன் விளைவாக, இந்த நடைமுறை அசாமில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர், குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள், 1971 மார்ச் 25-ம் தேதிக்கு முன்பாக வந்திருந்தால் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x