Published : 17 Oct 2024 05:12 AM
Last Updated : 17 Oct 2024 05:12 AM
திருப்பதி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-நெல்லூர் இடையே இன்று காலை கரையை கடக்க கூடுமென விசாகப்பட்டினம்வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, நெல்லூர் மற்றும் கடப்பாவுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை இலாகாவின் எச்சரிக்கையால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் மட்ட அரசுஅதிகாரிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி, முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம், மருத்துவவசதிகளை செய்து தர வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சித்தூர், நெல்லூர், திருப்பதி, பிரகாசம், நெல்லூர் மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். புயல் எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் விடுமுறை விடப்பட்டது. கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து திருப்பதி, நெல்லூர், பிரகாசம் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பின. திருப்பதியில் 2-வது மலைப்பாதையில் நேற்று காலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
உடனடியாக தேவஸ்தான ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மண் சரிவை அகற்றினர். புயல் எச்சரிக்கை காரணமாக நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. நெல்லூர் நகரம் மட்டுமல்லாது, காவலி, அல்லூரு, பிட்ரகுண்டா, கொண்டாபுரம், குட்லூரு உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. இங்குள்ள சுவர்ணமுகி நதியில் வெள்ள நீர் பெருகி வருவதால் அப்பகுதியில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதேபோன்று, பிரகாசம் மாவட்டத்திலும், ஓங்கோல், கித்தலூரு, மார்க்காபுரம், கனிகிரி, தர்மா, ராஜுபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 360 பேருடன் 18 போலீஸ் குழுவும்இணைந்து தயார் நிலையில் உள்ளனர். கடப்பா மாவட்டத்தில் இரவு முதல் கன மழை பெய்து வருவதால் கடப்பா பேருந்து நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போருமாமிள்ளு, ஒண்டிமிட்டா பகுதியில் அதிக மழை சதவீதம் பதிவாகி உள்ளது. கடப்பா, அன்னமைய்யா மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு தனியார் அரசு பள்ளிகளில் தங்க வைக் கப்பட்டுள்ளனர்.
திருப்பதி மாவட்டம் முழுவதும் தொடர் மழை கடந்த திங்கட்கிழமை முதலே பெய்து வருகிறது. கூடூரு, சூலூர்பேட்டை, வெங்கடகிரி தொகுதிகளில் கன மழை பெய்துள்ளது. தொடர் மழைக்கு காளஹஸ்தி - தடா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருமலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீவாரி பாதம், ஜபாலி, ஆகாச கங்கை போன்ற இடங்களுக்கு செல்ல பக்தர்களை தேவஸ்தானம் அனுமதிக்க வில்லை. திருப்பதி கபில தீர்த்த நீர்வீழ்ச்சியில் நீர்வரத்துஅதிகரித்ததால் அந்த அருவியில் அதிக வெள்ள நீர் கொட்டுகிறது.
வெள்ளத்தில் விமான நிலையம்: நேற்று காலை ரேணிகுண்டா விமான நிலையத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. விமான ஓடு பாதையிலும் வெள்ளம்போல் நீர் தேங்கியதால், ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்த இண்டிகோ விமானம், இங்கு தரையிறங்காமல், சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
ஸ்ரீவாரி மெட்டு மார்க்கம் மூடல்: திருப்பதியில் கன மழையை தொடர்ந்து, நேற்று மதியம், தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் மற்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி ஆகியோர், அதிகாரிகளுடன் காணொலி மூலம்ஆலோசனை நடத்தினர். அப்போது, ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்தை வியாழக்கிழமை (இன்று) மூடிவிடும்படி உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து காற்று, மழை நீடித்தால், அலிபிரி நடைபாதை மார்க்கத்தை மூடுவது குறித்து ஆலோசிக்கலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. கன மழை பெய்து வருவதால், இன்று இரவு திருமலையில் நடைபெறவிருக்கும் பவுர்ணமி கருட சேவை நடைபெறுமா, இல்லையா என்பது குறித்தும் இன்று காலை முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT