Last Updated : 25 Jun, 2018 07:03 PM

 

Published : 25 Jun 2018 07:03 PM
Last Updated : 25 Jun 2018 07:03 PM

‘உடம்பை கவனமா பாத்துக்குங்க’: மயங்கிவிழுந்த விமானப்படை வீரரிடம் நலம்விசாரித்த பிரதமர் மோடி

டெல்லியில் அணிவகுப்பின் போது, வெயில் தாங்க முடியாமல் மயங்கிவிழுந்த விமானப்படை வீரரிடம் உடல் நலம் விசாரித்த பிரதமர் மோடி, உடலை கவனமாக பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கினார்

சிறப்புப்பயணமாக செஷல்ஸ் நாட்டு அதிபர் டேனி பாரே முதல்முறையாக டெல்லி வந்துள்ளார். அவருக்கு இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த செஷல்ஸ் அதிபர் டேனி பரேவுக்கு, முப்படை வீரர்கள் அணி வகுப்பு மரியாதை அளித்தனர். அந்த அணிவகுப்பின் போது, பிரதம்ர மோடியும், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தும் இருந்தனர்.

அணி வகுப்பு மரியாதை நடந்து கொண்டிருந்தபோது, விமானப்படை வீரர் ஒருவர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் திடீரென மயங்கி விழுந்தார். அவரை வீரர்கள் அப்புறப்படுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் மீண்டும் அவர் படை அணி வகுப்பில் கலந்து கொண்டார்.

அணி வகுப்பு முடிந்தபின் ஷெசல்ஸ் நாட்டு அதிபர், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் மாளிகைக்குள் சென்றனர். ஆனால், அவர்களுடன் செல்லாத பிரதமர் மோடி, நேரடியாக மயக்கம் போட்டு கீழே விழுந்த விமானப்படை வீரரிடம் வந்தார். அவரின் உடல் நிலை குறித்து விசாரித்தார். உடலை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள், உடல்நிலையில் அதிகமான கவனம் செலுத்துங்கள் என்று அக்கறையாக அறிவுரை கூறி சில நிமிடங்கள் பேசினார்.

இதைப் பார்த்த மற்ற விமானப்படை வீரர்கள் முகத்தில் ஒருவிதமான புன்னகையும், மகிழ்ச்சியும் நிரம்பி இருந்தது. அதன்பின் வீரர்களிடம் மோடி விடைபெற்றுச் சென்றார்.

விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்ததும் அவரின் சென்று பிரதமர் மோடி உடல்நலம் விசாரித்தது வீரர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x