Published : 15 Oct 2024 09:49 PM
Last Updated : 15 Oct 2024 09:49 PM
புது டெல்லி: கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார். இந்நிலையில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது.
அதன்படி, “வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் இந்தத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 28ம் தேதி பரிசீலிக்கப்படும். நவம்பர் 13ம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். இதன் மூலம் முதன்முறையாக வாக்கு அரசியலுக்குள் நுழைகிறார் பிரியங்கா காந்தி. மேலும், காலியாக உள்ள பாலக்காடு சட்டப்பேரவை தொகுதியில் ராகுல் மம்கூடத்தில் மற்றும் தனிதொகுதியான செலக்கரா தொகுதியில் ரம்யா ஹரிதாஸூம் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
1999 ஆம் ஆண்டு அமேதியில் பாஜக வேட்பாளர் அருண் நேருவுக்கு எதிராக தனது தாயார் சோனியா காந்திக்காக பிரச்சாரம் செய்ய அரசியல் களத்துக்குள் நுழைந்தார் பிரியங்கா காந்தி. தொடர்ந்து அவர் தேர்தல் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...