Published : 15 Oct 2024 12:55 PM
Last Updated : 15 Oct 2024 12:55 PM

கேரளா: பிரிவு உபசார விழாவுக்கு மறுநாளில் வீட்டில் மாவட்ட துணை ஆட்சியரின் சடலம் மீட்பு

கோப்புப் படம்

கண்ணூர்: வடக்கு கேரள மாவட்டத்தில் ஆட்சியர் உட்பட சக அதிகாரிகள் கொடுத்த பிரியாவிடை விழாவுக்கு அடுத்தநாள் துணை ஆட்சியர் நவீன் பாபு, அவரது வீட்டில் இறந்த நிலையில் கிடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: நவீன் பாபு தனது சொந்த மாவட்டமான பத்தனம்திட்டவில் துணை ஆட்சியராக பொறுப்பு ஏற்றுக்கொள்ள இருந்த நிலையில் அவர் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பாபுவின் பிரியாவிடை நிகழ்வில், உரிய அழைப்பு இல்லாமல் கலந்து கொண்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி.பி.திவ்யா, துணை ஆட்சியர் மீது முறைகேடு குற்றம்சாட்டியிருந்தார்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், துணை ஆட்சியிர் பாபு செங்கலையில் ஒரு பெட்ரோல் பங்க் வைப்பதற்கான அனுமதி வழங்க பல மாதங்கள் தாமதம் செய்ததாக விமர்சித்திருந்தார். மேலும், துணை ஆட்சியர் பாபு அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்புதான் அதற்கான அனுமதியை வழங்கியதாக குற்றம்சாட்டியிருந்த திவ்யா, உடனடியாக அனுமதி வழங்கப்பட்டதற்கான காரணம் தனக்கு தெரியும் என்று தெரிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் நவீன் பாபுவின் சக அதிகாரிகள் முன்னிலையில் திவ்யா இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். பேசி முடித்ததும், நினைவுப் பரிசு வழங்கப்படும் வரை இருக்குமாறு திவ்யாவிடம் கூறப்பட்டபோது அவர் அதற்காக காத்திருக்க விரும்பவில்லை என்று மேடையை விட்டு அகன்று விட்டார். இந்தப் பின்னணியில் துணை ஆட்சியிரின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x