Published : 15 Oct 2024 10:15 AM
Last Updated : 15 Oct 2024 10:15 AM

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் எப்போது? - இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்.15) மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பின் நிமித்தம் மாலை 3.30 மணியளவில் தேர்தல் ஆணையர்கள் - செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

ஜார்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. மகாராஷ்டிரா சட்டபேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.

தயார் நிலையில் அரசியல் கட்சிகள்: மகாராஷ்டிராவை பொறுத்தவரை காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு), சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து ஆளும் பாஜக - சிவசேனா (ஷிண்டே பிரிவு) கூட்டணியை வீழ்த்த ஆயத்தமாகி வருகின்றன. அண்மையில் நடந்த தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) பிரிவு கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

அதேபோல, ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, எதிர்க்கட்சியாக உள்ள பாஜக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.

இதற்கிடையில், அண்மையில் நடந்து முடிந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைப் பிடித்தது. ஜம்மு காஷ்மீரில் இண்டியா கூட்டணி வென்றது. இந்நிலையில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவில் வெற்றி பெற பாஜக கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

வயநாடு இடைத்தேர்தல் எப்போது? மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளோடு வயநாடு, நாண்டெட், பாசிர்ஹத் ஆகிய 3 மக்களவை தொகுதிகள், மற்றும் 47 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வயநாட்டில் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் அத்தொகுதி காலியாக உள்ளது. நாண்டெட் தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்த் சவான், பாசிர்ஹத் தொகுதி திரிணமூல் எம்.பி. ஹாஜி ஷேக் நூருல் இஸ்லாம் ஆகியோர் அண்மையில் இறந்தனர். இதனால் அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் இன்று தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் களம் சூடு பிடிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x