Published : 14 Oct 2024 01:29 PM
Last Updated : 14 Oct 2024 01:29 PM

தாவூத் வழியில் லாரன்ஸ் பிஷ்னோய்: 11 மாநிலங்கள், 700 ஷூட்டர்கள் - என்ஐஏ தகவல்

புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ). அதோடு லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவை தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனி உடன் என்ஐஏ ஒப்பிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது. அவரது குழு இந்தியாவில் 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு இயங்குவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. சிறிய அளவில் தொடங்கி அவரது குழு மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன் மூலம் வட இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அவரது குழுவை சத்விந்தர் சிங் என்கிற கோல்டி பிரார் இயக்கி வருகிறார். அவர் கனடா மற்றும் இந்திய அளவில் தேடப்படும் குற்றவாளி. பிஷ்னோய் குழுவில் உள்ள 700 பேரில் 300 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் குழுவுக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. மிரட்டி பணம் பறிப்பது அவர்களது குழுவின் பணியாக உள்ளது. அப்படி பெறப்படும் கோடிக்கணக்கான பணத்தை ஹவாலா மூலம் மாற்றியுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருகிறது. அதோடு காலிஸ்தான் தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரின்டா தனது குற்ற நடவடிக்கைகளுக்கு பஞ்சாப்பில் பிஷ்னோய் குழுவை பயன்படுத்தி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x