Published : 14 Oct 2024 08:46 AM
Last Updated : 14 Oct 2024 08:46 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “2019 ஆம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் மறுகட்டமைப்பு சட்டத்தின் 73ஆவது பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து உரிமை கோரிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பாஜக அரசாங்கத்தால் கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, லடாக் இந்த பிராந்தியத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019 அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதற்கிடையில், சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 5 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந் தனையற்ற ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலும் தேசிய மாநாட்டுக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியும். எனினும், தேசிய மாநாட்டு கட்சிக்கு காங்கிரஸ் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது காரா தெரிவித்தார். துணை நிலை ஆளுநர் 5 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வார்.
இத்தகைய சூழலில் காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா 16-ம் தேதி பதவியேற்கிறார். ஏற்கெனவே, காஷ்மீரில் உமர் அப்துல்லா கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. உமர் அப்துல்லா பதவியேற்க அதிகாரபூர்வமாக அனுமதி கிடைத்துவிட்டது. இனி காஷ்மீரில் மக்களாட்சி அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT